காரைதீவில் கே.எஸ்.ஸியின் 22வது மாபெரும் சித்திரைப்புத்தாண்டு கலாசார விழா!
(காரைதீவு  நிருபர் சகா)
 
பிறக்கும் விளம்பி வருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் 22வது வருடமாக இம்முறை  சிறப்பு சித்திரை கலாசார பாரம்பரிய விளையாட்டு விழாவை  காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
காரைதீவு விளையாட்டுக்கழகம் தனது 35வருட பூர்த்தியைமுன்னிட்டும் பிறக்கும் விளம்பிவருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டும் தனது இணைநிறுவனமான விபுலாநந்த சனசமுக நிலையத்துடன் இணைந்து சக்தி எவ்.எம். மற்றும் கல்முனை சொர்ணம் நகைமாளிகையினதும் அனுசரணையுடன் இம்மாபெரும் புத்தாண்டு விழாவை நடாத்தவுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி காலை தொடக்கம் மாலை வரை இப்புத்தாண்டுவிழா தலைவர் ஆ.அமிர்தானந்தன் தலைமையில் நடைபெறவிருப்பதாக கழகச்செயலாளர் எஸ்.கிரிசாந்த் தெரிவித்தார்.
பிரதமஅதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
காலையில் பைசிக்கிள் ஓட்டம் மரதன் ஓட்டம் சதுப்புநில ஓட்டம் படகோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாலையில் பி.ப.2.30மணியளவில் கனகரெத்தினம் விளையாட்டரங்கில் சறுக்குமரம் ஏறுதல் தலையணைச்சமர் தேங்காய் திருவுதல் கிடுகிழைத்தல் பலூன்ஊதிஉடைத்தல் போன்ற பல பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் கிரிசாந்த் மேலும் தெரிவித்தார்.
மாலை நிகழ்வில் முக்கிய அம்சமாக வருடாவருடம் நடைபெற்றுவரும் கல்விச்சாதனையாளர்கள் மற்றும் உயர் கல்விச் சாதனையாளர்கள் பகிரங்கமாக பாராட்டிக்கௌரவிக்கப்படவுள்ளனர். இமமுறை 16கல்விச்சாதனையாளர்களும் 5உயர்கல்விசாதனையாளர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
 

By admin