காணாமல்போன பலர் சுயநினைவின்றி உயிருடன் உள்ளார்கள் -முன்னாள் போராளியின் பகிரங்க வாக்குமூலம்

வவுனியாவில் காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதாக பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான 31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன்போதுஇ தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

என்னைப்போலவே பலரும் தடுப்பில் பல இன்னல்களை சந்தித்து வேதனைகளுடன் இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பல தாய்மார் தங்கள் பிள்ளைகள் காணாமல் போய்விட்டதாக கூறுகின்றார்கள்.

ஆனால் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி உள்ளார்கள். இதனால் எனது உயிருக்கு ஆபத்து வந்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் நான் எனது அம்மா அப்பாவை இறுதி யுத்தத்தில் 2009ம் ஆண்டு இழந்தேன். இரண்டு அண்ணாவும் அக்காவும் தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து மாவீரர்களாகிவிட்டனர்.

அதன் பின்னர் என்னையும் 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 26 ஆம் திகதி தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றனர். தடுப்பு முகாம் காவலில் என்னை கடும் சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்.

என்னை சின்னாபின்னமாக்கி வேதனைப்படுத்தினார்கள். எனது கால் பெருவிரல் நகத்தை பிடுங்கினார்கள். பல வேதனைகளையும் இழப்புக்களையும் சந்தித்தேன்.

பின்னர் 2017.12.26 அன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டேன். தற்போது 85 வயது அம்மம்மாவுடன் வவுனியாவில் வசித்து வருகின்றேன்.

இந்நிலையில் எனக்கு முல்லைத்தீவு வற்றாப்பளையில் 4 ஏக்கர் காணி உள்ளது. அதில் 2 ஏக்கர் தென்னந்தோப்பு. அதனையும் தற்போது இராணுவம் தன்வசப்படுத்தி வைத்து என்னிடம் தர மறுக்கின்றனர்.

உதவி அரசாங்க அதிபர் ஊடாக கடிதங்கள் கொடுத்தும் தற்போது அதனை தரமுடியாது என சொல்கின்றனர். நான் எனது வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும்.

அதற்கு எனது காணியை பெற்றுத்தருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தால் நல்லது.

எனக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாக வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு உதவிகள் கிடைத்தால் எனது வாழ்வை கொண்டு செல்லவும் வசதியாக இருக்கும் எனவும் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நன்றி – தமிழ்வின்

 

By admin