தமிழரசுக்கட்சியின் கடிதத்துக்கு காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் விளக்கம்!


(காரைதீவு நிருபர்)

காரைதீவு பிரதேச சபை அமர்வில் கட்சி விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டமை தொடர்பில் அண்மையில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்தால் உறுப்பினர் ச.நேசராசாவிற்கு விளக்கம்கோரி கடிதம் அனுப்பபட்டிருந்தது.

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரின் விளக்கம் கோரி அனுப்பப்பட்ட கடிதத்துக்கான விளக்கங்களை காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் சபாபதி நேசராசா செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அனுப்பிய விளக்கக் கடிதத்தில்,

சபாபதி நேசராஜா ஆகிய என்னை அம்பாறை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் இலங்கை தமிழ்அரசுக்கட்சி சார்பில் 2018ம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் காரைதீவு பிரதேச சபை சார்பாக போட்டியிடுமாறும், தவிசாளர் பதவி உங்களுக்கே வழங்கப்படும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க காரைதீவு வாழ் மக்களின் நலனுக்காகவும், அபிவிருத்திக்காகவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றேன்.

அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு விசுவாசமான உறுப்பினராகவே செயற்பட்டு வருகின்றேன். இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்பதனை மிகத் தெளிவாக வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

இருந்த போதிலும் தமிழ் அரசுக் கட்சி செயலாளரின் என்மேலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எனது விளக்கத்தினைக் கூற கடமைப்பட்டுள்ளேன்.

2018.03.18ம் திகதியன்று மட்டக்களப்பில் நடைபெற்ற பிரதேச சபை உறுப்பினர்களுக்கான அறிவுறுத்தல் கருத்தரங்கில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறப்பட்டதற்கிணங்க, நான் அனைவருடனும் பேதங்காட்டாது ஒற்றுமையுடனும் விட்டுக் கொடுப்புடனும் செயற்பட்டு வருகின்றேன். (ஏனைய 3 உறுப்பினர்களான திரு.கி.ஜெயசிறில், திருமதி.ஜெயராணி திரு.மோகனதாஸ் ஆகியோர் இதற்கு மாறாக செயற்பட்ட போதிலும்)

காரைதீவு சுயேட்சைக் குழுத் தலைவர் திரு.ச.நந்தகுமார் அவரது வீட்டில் தமிழ் அரசுக் கட்சி செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இறுதி நேரக் கூட்டத்தின் போது கட்சிக்காகவும்இ கட்சியின் ஒற்றுமைக்காகவும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு கௌரவ திரு.கி.துரைராசசிங்கம் ஐயா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தவிசாளர் பதவியினை விட்டுக்கொடுத்தேன்.

பிரதேச சபையின் முதலாவது அமர்வில் தவிசாளர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்ற போது இலங்கைத் தமிழரசுக்கட்சியால் முன்மொழியப்பட்ட திரு.கி.ஜெயசிறில் அவர்களுக்கு எனது வாக்கை அளித்திருந்தபோதிலும் திரு.கி.ஜெயசிறில் அவர்களுக்கு ஆதரவை வழங்கவில்லை என்று என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மிகவும் மனவேதனை அளிக்கின்றது.

இரண்டாவது விடயம் உபதவிசாளர் தெரிவின் போது நடைபெற்ற சம்பவம் பற்றியது.

இலங்கை தமிழரசுக் கட்சி முஸ்லிம் காங்கிரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி கௌரவ திரு.கி.துரைராசசிங்கம் ஐயா அவர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது ஏனைய உறுப்பினர்கள் எவராலுமோ எனக்குத் தெரியப்படுத்தாமையினால் ஏற்பட்ட குழப்பமும் பதட்டமும் எனது ஊர் மக்களால் தேர்தலின் போது எனக்கு வழங்கப்பட்ட “தமிழ் பிரதேச சபையை தமிழர்களே ஆளவேண்டும் என்ற காரைதீவு மக்களின் ஆணையை மதிக்கவேண்டும்” என்ற காரணத்தினாலேயே நடுநிலை வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அல்லாமல் கட்சியையோ கட்சிக்கொள்கைகளை மீறவேண்டும் என்பதற்காகவல்ல என்பதனை காரைதீவு வாழ் மக்களுக்கு அறியத்தருகின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

By admin