மு.கா.வை முறியடிப்பதிலேயே ரிஷாத் குறியாக இருந்தார்; பிரதி மேயரை பெற முனையவில்லை;சாடுகிறார் முதல்வர் றக்கீப்

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)

கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைவதை முறியடிப்பதிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை குறியாக இருந்து செயற்பட்டதே தவிர தனது கட்சியின் பிரதிநிதியான சி.எம்.முபீத்துக்கு பிரதி மேயர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்கு முனையவில்லை என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் பதவியை தமது ஊரில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு பிரதியான முபீத்துக்கு கல்முனை வழங்காமல் தமிழர் விடுதலை கூட்டணியின் காத்தமுத்து கணேஷுக்கு வழங்கியமை தொடர்பில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கெதிராக நற்பிட்டிமுனை மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பிரசாரமானது முழுக்க முழுக்க அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நற்பிட்டிமுனை ஜூம்ஆப் பள்ளிவாசல் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே முதல்வர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.

கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது;

“கல்முனையில் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எமது பிரதி அமைச்சர் ஹரீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருந்த நிலையில் அவர் சாய்ந்தமருது தோடம்பழ சுயேட்சைக்குழுவையும் மற்றும் சிலரையும் இணைத்து ஆட்சியமைப்பதற்கான தீவிர முயற்சிகளிலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

சாய்ந்தமருது தோடம்பழ சுயேட்சைக்குழுவினருக்கு மேயர் பதவியையும் மருதமுனை ஹெலிகொப்டர் சுயேட்சைக்குழு உறுப்பினருக்கு பிரதி மேயர் பதவியையும் கொடுப்பதற்கு அவர்களுடன் அமைச்சர் ரிஷாத் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது. தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய காங்கிரஸ் மற்றும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர்களின் ஆதரவையும் அவர் உறுதிப்படுத்திக் கொண்டார்.

கடந்த 02 ஆம் திகதி சபை கூடுவதற்கு முதல் நாள் இரவு இவ்விடயம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே எமது ஆசன சமன்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை எழுந்தது. இதன்போது அவர்களுக்கு பிரதி மேயர் பதவியை வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது.

சபை கூடுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்னர் வரை றிசாத் பதியுதீன் எம்முடன் கூட்டிணைவதற்கோ பிரதி மேயர் பதவியை பெற்றுக் கொள்வதற்கோ முன்வரவில்லை. ஆனால் சாய்ந்தமருது மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக் காரணமாக தோடம்பழ சுயேட்சைக்குழுவினர் பின்வாங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் சபைக்கு வராத நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஐவரும் சபைக்கு வந்து எம்முடன் எந்த உடன்பாடும் இல்லாத நிலையில் வாக்களிப்பின்போது எனக்கு ஆதரவு வழங்கினார்கள்.

அதேவேளை பிரதி மேயர் தெரிவின்போது எம்மால் காத்தமுத்து கணேஷின் பெயர் பிரேரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் முபீத்தின் பெயரை பிரேரித்து எம்மை சங்கடத்திற்குள் தள்ளிவிட்டனர். இருந்தபோதிலும் எமது கட்சி உறுப்பினர்கள் காத்தமுத்து கணேஷையே ஆதரித்தனர்.

இந்த இடத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கட்சிக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸுக்கும் இருந்தது. அது மீறப்பட்டிருந்தால் தமிழ் சமூகம் எம்மை எவ்வாறு நோக்கியிருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஹென்றி மகேந்திரன் மேயர் பதவிக்கு போட்டியிட்டிருந்த நிலையில் மொத்தமாக ஆறு தமிழ் உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு வழங்காமல் எம்மை ஆதரித்தமைக்காக இந்த கைமாறை அவர்களுக்கு செய்ய வேண்டியிருந்தது. இதன் மூலம் கல்முனை பிராந்தியத்தில் தமிழ்- முஸ்லிம் ஐக்கியம் மேலும் பலப்படும் என்பதுடன் முழு நாட்டுக்கும் நல்லதொரு முன்மாதிரியை காட்டியிருக்கின்றோம்.

நற்பிட்டிமுனை உறுப்பினர் முபீத் பிரதி மேயர் பதவியை தவற விட்டதற்கு அவரும் அவரது கட்சி தலைவரும் மேற்கொண்ட பிழையான நடவடிக்கைகளே காரணமாகும்.

கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைவதை என்ன விலை கொடுத்தாவது முறியடிக்க வேண்டும் என்று அமைச்சர் றிசாத் கங்கணம் கட்டிக் கொண்டு காய்  நகர்த்தினார். அதற்கு முபீதும் துணை போயிருந்தார். தமது ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரியின் இரு கண்களும் போக வேண்டும் என்பது போன்று இவர்கள் செயற்பட்டார்கள்.

இப்படி செய்வதை எல்லாம் செய்து விட்டு நற்பிட்டிமுனைக்கு கிடைக்க வேண்டிய பிரதி மேயர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து விட்டது என்று அந்த ஊர் மக்களை சீண்டி விடுவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர்” என்றார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற மருதமுனை ஹெலிகொப்டர் சுயேட்சைக்குழு உறுப்பினர் முஹம்மட் நவாஸ் கருத்து தெரிவிக்கையில்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணிக்கு ஆதரவளிக்க முன்வந்தால் எனக்கே பிரதி மேயர் தருவதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் என்னிடம் நேரடியாக உறுதியளித்திருந்தார் எனவும் அப்போது அவருடன் இருந்த முபீத் அதற்கு முழுமையாக இணக்கம் தெரிவித்து உற்சாகப்படுத்தினார் எனவும் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் தொலைபேசி மூலம் இணைந்து கொண்ட பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸும் நற்பிட்டிமுனை முக்கியஸ்தர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்தார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த நற்பிட்டிமுனை பள்ளிவாசல் பிரதிநிதிகள்; இச்சந்திப்பின் மூலம் பிரதி மேயர் தெரிவு தொடர்பில் இடம்பெற்ற உண்மைகளை அறிந்து கொண்டுள்ளதாகவும் இப்பதவி தொடர்பில் குறித்த உறுப்பினர் காத்திரமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது எனவும் இவ்விடயம் தொடர்பில் எம்மைக் கூட அவர் அணுகவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும் நற்பிட்டிமுனை அபிவிருத்தி தொடர்பில் கூடிய கரிசனை செலுத்துமாறு வலியுறுத்திய பள்ளிவாசல் பிரதிநிதிகள், முதல்வர் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் உறுதியளித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் றக்கீப்; நற்பிட்டிமுனை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பள்ளிவாசல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

 

By admin