அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்படுமாகவிருந்தால் அதனை முற்றாக எதிர்ப்போம்!
கல்முனை மாநகரசபை அமர்வில் த.தே.கூ.உறுப்பினர்ஹென்றி சூளுரை!
 
(காரைதீவு  நிருபர் சகா)
 

கல்முனை அபிவிருத்தியடையவேண்டும் என்பதில் இரண்டாம் கருத்திற்குஇடமில்லை. ஆனால் அவ் அபிவிருத்திகள் எந்த ஒரு இனத்தையும் பாதிக்காதவகையில் அமையவேண்டும். மாறாகப்  பாதிக்குமாகவிருந்தால் அதனை முற்றாக எதிர்ப்போம்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றிமகேந்திரன் கூறினார்.

கல்முனை மாநகரசபை முதல்அமர்வு முடிந்தகையோடு புதிய மேயர் சட்டத்தரணி எம்.ஏ.றக்கீப் தலைமையில் உறுப்பினர்களது கலந்துரையாடலொன்று மேயர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பிரதியமைச்சர் எச்எம்.எம்.ஹரீசும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்.

அங்கு ஹென்றி மேலும் பேசுகையில்:

எதிர்க்கட்சி என்றால் அனைத்தையும் எதிர்ப்பது என்பது ஜனநாயகமில்லை. பொருத்தமானவற்றை ஏற்று பொருத்தமில்லாதவற்றை எதிர்ப்பது பொருளாகும்.

எனவே இந்த புதிய சபையில் நல்லவிடயங்களுக்கு நாம் பூரணஆதரவு தருவோம். ஆனால் பிழையான வியடங்களுக்கு உடன்படமாட்டோம்.

புதிய மேயர் எனது நல்ல நண்பர். அவர் தெரிவானதற்கு வாo;த்துக்கள். அவரது தலைமையில் கல்முனை சிறப்பான அபிவிருத்திகாணவேண்டும். அந்த அபிவிருத்திகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் எந்தவொரு இனத்தைப் பாதிக்காதவகையிலும் அமைதல்வேண்டும்.

 

கல்முனையில் தமிழருக்கான நிலையான சில பிரச்சினைகளிருப்பதை அனைவரும் அறிவர்.இது காலாகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டுவருகின்றது. உங்களது காலத்தில் சபை நடவடிக்கைகளுக்கு அப்பால் அந்தப்பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்த்து வைக்கப்படவேண்டும். அதற்கு ஸ்ரீலமு.கா தலைமை மற்றும் பிரதியமைச்சர் ஹரீசும் ஒத்துழைக்கவேண்டும்.

நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் என்ற விசமப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதில் எந்த உண்மையுமில்லை. நான் அப்படிப்பட்டவனல்ல.முஸ்லிம்களுக்கெதிராக எந்ததவறையும் நான்செய்தவனல்ல.அதற்காக தமிழினத்திற்கு விரோதமாக எந்தச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் அதனை முன்னின்று எதிர்ப்பேன். அது எனது உரிமையும்கூட. அதனை இனவிரோதமாகப்பார்க்கவேண்டியதில்லை.

ஒரு இனத்தால் இன்னொரு இனம் வஞ்சிக்கப்படக்கூடாதென்பதில் நம்பிக்கைகொண்டுள்ளவன் நான். இனிவரும் காலங்களில் இனமதபேதமின்றி நல்ல புரிந்துணர்வுடன் இதயசுத்தியுடன் சபையை வழிநடாத்திச்செல்ல ஒத்துழைப்பு நல்குவோம். என்றார்.

வரலாற்றில் முதற்றடவையாக தமிழர் பிரதிமேயர்!-  பிரதியமைச்சர் ஹரீஸ்

பிரதியமைச்சர் ஹரீஸ் பேசுகையில்:

இரு இனங்களும் வாழ்ந்து வருகின்ற இந்த கல்முனையில் மேயர் முஸ்லிமாகவும் பிரதிமேயராகவும் தெரிவான விடயம் வரவேற்புக்குரியது. 40வருடத்திற்குப்பிறகு கல்முனையில் தமிழ்மகன்;ஒருவர் பிரதிமேயராகவந்துள்ளார். இது எமது வெற்றி.

இதற்காக பலசுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடாத்தி இன்று அதன்பலனாக கணேசைப்பெற்றுள்ளோம்.அந்தமுயற்சிகளுக்கு ஒத்துழைப்புத்தந்த கணேசை மறக்கமுடியாது . இதனை எமது முஸ்லிம்சகோதரர்கள்விளங்கிக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக காத்தமுத்துகணேஸின் வரவு மகிழ்ச்சியளிக்கின்றது.

கல்முனை வரலாற்றில் முதல்தடவையாக தமிழ்மகன் ஒருவர் பிரதி மேயராகத் தெரிவாகியுள்ளார். இது வரலாறு.வாழ்த்துக்கள்.

வெளிநாடுகளில் இவ்வகையான சபைகள் ஒருவித பாகுபாடுமின்றி நடப்பதைக்காணலாம். அதுபோல  எந்த இனப்பாகுபாடுமின்றி இந்தசபை இயங்கவேண்டும்.

கல்முனைக்கு 1900மில்லியன் ருபா ஒதுக்கப்பட்டுள்ளது .அதனை சிறப்பாகப்பயன்படுத்தி கல்முனை மாநகரை அபிவிருத்திசெய்யவேண்டும்.

கல்முனை மாநகர் அபிவிருத்தி செய்ய சகலரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

இருஇனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். அந்தப்புரிந்துணர்வுதான் உண்மையான அபிவிருத்தி.

மாகரசபை 5மாடி கட்ட்டம் கட்ட நிதி வந்துள்ளது. அதனை விரைந்து செயற்படுத்தவேண்டும்.என்றார்.

இனவேறுபாடின்றி சபை செயற்படும்-புதிய மேயர் றக்கீப்.

புதிய மேயர் றக்கீப் பேசுகையில்:

எனது தெரிவில் கண்ணும்கருத்துமாகவிருந்த எமது தலைவர் அமைச்சர் ரவூப்ஹக்கீமிற்கும் பிரதியமைச்சர் ஹரீசுக்கும்  நன்றிகள்.

நண்பர் ஹென்றி எனது நல்லநண்பர். அவரோடு கட்சிபேதமின்றிப் பயணிப்பதற்கு  ஆசைப்படுகின்றேன்.

இந்தச்சபை இனவெறுபாடின்றி  செயற்படும் . இதில் யாரும் அச்சம்கொள்ளத்தேவையில்லை.

கட்சி தலைமை மற்றும் பிரதியமைச்சர்  ஹரிசின் ஆலோசனையின்கீழ் இந்த  மாநகரசபை செயற்பாடுகள் செவ்வனே முன்னெடுக்கப்படும்.

கடந்த 40வருடகால மாநகரசபை வரலாற்றில் பிரதிமேயராக ஒரு தமிழ்மகன் தெரிவாகியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. அவரையும் அரவணைத்து ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்றில்லாமல் சகலரும் இணைந்தே சபையை முன்னெடுப்போம் என்றார்.

ஹரீஸ் தந்த பரிசு – பிரதிமேயர் கணேஸ்!

பிரதி மேயர் காத்தமுத்துகணேஸ் உரையாற்றுகையில்:

எனக்கு இன்றுகிடைத்த வரலாற்றுப்பரிசு பிரதிதவிசாளர் என்ற பதவி. இந்தப்பரிசை அளித்தவர் பிரதியமைச்சர்  ஹரீஸ். அதற்காக அவருக்கும் ஆதரவளித்த மு.கா உறுப்பினர்களுக்கும் மேயருக்கும் நன்றிகள்.

கல்முனையில் முஸ்லிம்களை எதிர்த்து தமிழர்களோ தமிழர்களை எதிர்த்து முஸ்லிம்களோ வாழமுடியாது. இருஇனங்களும் இணைந்தால்தான் வாழ்க்கை.

எனவே இன்று வந்துள்ள இச்சபை இரு இனங்களும் சேர்ந்து இந்த அழகிய மாநகரை அபிவிருத்திசெய்யவேண்டும். என்றார்.

By admin