தமிழ்தேசிய கூட்டமைப்பின் துரோகத்தாலே உபதவிசாளரை  இழந்தது காரைதீவுமண். 
காரைதீவு சுயேச்சைக்குழு உறுப்பினர் கே.குமாரசிறி 
-காரைதீவு  நிருபர் சகா-
 

காரைதீவுப்பிரதேசசபையில் 7தமிழ் உறுப்பினர்களிருந்தும் த.தே.கூட்டமைப்பு நடாத்திய நாடகத்தில் காரைதீவு தமிழ்மக்கள் தோற்றுப்போயுள்ளனர்.

காரைதீவு மண்ணுக்காக இறங்கி வெற்றியீட்டிய அந்த இரு தமிழ் சுயேச்சை உறுப்பினர்களது ஆசனங்களை விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதே 2ஆசனங்கள் பெரிதாகத் தெரிந்தது ஏன்? தமிழ்த்தேசியம் பேசும் த.தே.கூட்டமைப்பு தமிழரை புந்தள்ளி முஸ்லிமை இணைத்துக்கொண்டது துரோகமல்லவா?

இவவாறு காரைதீவு சுயேச்சைக்குழு உறுப்பினர் கே.குமாரசிறி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

நடந்துமுடிந்த காரைதீவு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தன்வசமிருந்த ஆட்சிஅதிகாரத்தை கூட்டமைப்பு இழந்த நிலையில் இம்முறை தெரிவுசெய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் சந்தர்ப்பம் கிடைத்தும் உபதவிசாளரை தமிழருக்கு வழங்காது  முஸ்லிம்காங்கிரசுக்கு வழங்க முனைந்தது வேதனையளிக்கின்றது.

காரைதீவு பிரதேச சபையில் மொத்தமாகவுள்ள பன்னிரண்டு உறுப்பினர்களில் பெரும்பான்மையாக தமிழர்கள் ஏழுபேர் இருந்தும் உபதவிசாளரை இழந்தனர் தமிழர்கள். இதற்கான முழு பொறுப்பையும் தமிழ்தேசிய கூட்டமைப்பே ஏற்க வேண்டும்.

தேர்தல் முடிந்து ஒன்றரை மாத இடைவெளியில் முதலாவது சபை அமர்விற்கு முன்வரை கூடிய ஆசனங்ளைப்பெற்ற கூட்டமைப்பினரால் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை. இதில் சுயேட்சைக்குழுவினர் தேர்தல்முடிந்த கையோடு கூட்டமைப்புடன் பேசத்தயாரென பகிரங்கமாக அழைத்திருந்தனர். தேர்தலின் முடிவுளின்படி தமிழர் ஆட்சியமைப்பதற்கு தேவையான தமிழ் உறுப்பினர்கள் ஏழுபேர் இருந்தும் அவர்களுடன் கூட்டமைப்பு இணங்கி செல்லாதது ஏன்?

கடந்த கிழக்குமாகாணசபை முதல் இந்த உள்ளுராட்சிமன்றசபை அதிகாரங்களையும் முஸ்லிம் காங்கிரசிற்கு தாரைவார்த்து வருவது இவர்கள் தமிழ்மக்களுக்கு செய்யும் துரரோகமாகும். காரைதீவு பிரதேசசபைக்கு தெரிவான கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் சுயேட்சைக்குழுவின் இருவரும் சுதந்திரகட்சியின் ஒருவரும் தமிழர்களாக உள்ளனர். எனவே ஏலவே இந்த தமிழ் உறுப்பினர்களுடன் பேச்சு நடாத்தி சபையை இலகுவாக அமைத்திருக்கலாம். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளாதது ஏன்?

முதலாவது அமர்வில் தவிசாளர் தெரிவு நடைபெற்றபோது தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஜெயசிறில் மற்றும் சுயேட்சையின் பூபாலரெத்தினம் ஆகியோரில் திருவுளதுண்டுசீட்டின்மூலம்  கூட்டமைப்பு வெற்றி பெற்றது. உபதவிசாளராக முஸ்லிம் காங்கிரசினதும் ஸ்ரீலங்காசுதந்திர கட்சியினதும் சகோதர இனத்தவர்கள் இருவரில் சுதந்திரகட்சியின் உறுப்பினர் ஜாகிர் அவர்கள் தெரிவானார்.

இதில் ஏற்கனவே கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரசுக்கு  உபதவிசாளர் தருவதாக பேச்சு நடத்தப்பட்டுள்ளது. தவிசாளர் தெரிவில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கும் உபதவிசாளர் தெரிவில் கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆதரவு வழங்கியதன் மூலம் இவர்களது கபடத்தனம் வெளிப்படுவதோடு  உபதவிசாளர் தெரிவின்போது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவளித்தபோதும் அதில் ஒரு கூட்டமைப்பின் உறுப்பினர் நடுநிலை வகித்தது குறிப்பிடதக்கது.

இதற்காக அந்த உறுப்பினர் மீது கூட்டமைப்பினர் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டமையும்  கூட்டமைப்பின் கபடத்தன்மை வெளிப்படுகின்றது. எனவே தமிழ்மக்கள் கூட்டமைப்பினரின் இவ்வாறான சூழ்ச்சிகளை அறிந்து எதிர்வரும் தேர்தல்களில் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

சபைஅமர்வில் பார்வையாளர் அரங்கிலிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தலையீடு இருந்துள்ளது. சத்தம் போட்டு முஸ்லிம் ஒருவரின்பெயரை உச்சரித்தார்.அது சபையில் கேட்டது.இது தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணானது.  கல்முனையில் அதே பாராளுமனற உறுப்பினர் மு.காவுடன் சேரக்கூடாது என்று கூறியுள்ளார். அப்படி வழங்கினால் நான் இராஜினாமாச்செய்வேன் என்றுள்ளார். ஆனால் காரைதீவில் மு.காவிற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார். இதல்லவா கபடத்தனம்?

 

ஒருமாதகாலம்வரை எதுவுமே பேசாமலிருந்துவிட்டு  மு.காவுடன் பேசிவிட்டு கட்சிக்குள் தவிசாளர் போட்டியால் தாம் தோற்றுவிடுவோம் என்பதற்காக இறுதிக்கட்டத்தில் வந்து சுயேச்சையிடம் மண்டியிட்டனர். அதற்கு சுயேச்சை இணங்கவில்லை.காரைதீவு மக்களின் ஆணைக்கிணங்க தனித்துவம் காத்தனர். பதவியில்லாவிட்டாலும் இந்தத்துரோகக்கும்பலுடன் இணையமாட்டோம் என்றிருந்தனர்.

 

த.தே.கூட்டமைப்பு தமிழனை இணைக்காமல் முஸ்லிமை இணைத்து காரைதீவு மண்ணுக்கு பாரிய துரோகத்தை இழைத்துவிட்டது. இது  வரலாற்றில் பாரியகறை.இது சாணக்கியமல்ல. இது வரலாற்றுத்துரோகம். இருசபைகளை தனது அறியாமையினால் இழந்த எம்.பி. தனது கௌரவத்தை காப்பதாக எண்ணி காரைதீவில் மொத்தமாகச் சோரம்போயுள்ளார் என்பதே உண்மை.

By admin