காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு மு.மா.ச. உறுப்பினர்  இராஜேஸ்வரன் வாழ்த்து!

காரைதீவு மண்ணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமடையச் செய்வதற்காக இரவு, பகல் பாராது அயராது உழைத்து வரும் தமிழ்த் தேசியப் பற்றாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக இறைபலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை இப்பிரதேசத்தில் சிறந்த நல்லாட்சியை முன்னெடுப்பதற்கு வழிசமைக்கும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

காரைதீவு பிரதேச சபை தவிசாளராக கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பதவி ஏற்ற பின்னர் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அங்கு மேலும் பேசுகையில்,

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு பல முனைகளிலிருந்து பல்வேறுபட்ட சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. இவற்றையெல்லாம் எமது மக்கள் தகர்த்தெறிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலம் பெற வைத்துள்ளனர். இந்த வகையில் எமது மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக பதவியேற்றுள்ள ஜெயசிறில் மக்களோடு மக்களாக நின்று கடந்த காலங்களில் பல சமுகப் பணிகளை முன்னெடுத்த ஒருவர் இன்று இறை ஆசியால் அவருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவர் சிறப்பான சேவையினை மக்களுக்கு வழங்குவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி கி.துரைராஜசிங்கமும் புதிய தவிசாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

By admin