இன்று பரபரப்பான சூழ்நிலையில் கூடும் கல்முனை மாநகரசபையின் முதல் அமர்வு!
மிகவும் இறுக்கமான போட்டி: யார் மேயர்? பலத்தஎதிர்பார்ப்பு!
(காரைதீவு  நிருபர் சகா)
 
அம்பாறை மாவட்டத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த  கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று(2) திங்கட்கிழமை பி.ப 2.30மணிக்கு  கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தெரிவு இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கல்முனை மாநகரசபையானது 43வேட்பாளர்களைக்கொண்டது. 40 உறுப்பினர்கள் தெரிவாகவேண்டும். அவர்களில் பெண்கள் தொகை 10.
இம்முறை இச்சபைக்கு 9கட்சிகளும் 2சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன.இருந்தும் 2சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9 கட்சிகளும் 4சுயேச்சைகளும் போட்டியிட்டன. ஆதலால் இங்கு 559 வேட்பாளர்கள் களத்தில் குதித்து தற்போது தொங்கு உறுப்பினர் உள்ளிட்ட 41உறுப்பினர் தெரிவாகியுள்ளனர்.
இதில் ஜக்கியதேசியக்கட்சி(மு.கா) 12ஆசனங்கள் சுயேச்சைக்குழு4(சாய்நதமருது) 9ஆசனங்கள் தமிழரசுக்கட்சி(த.தே.கூ) 7ஆசனங்கள் அ.இ.ம.கா 5ஆசனங்கள் தமிழர்விடுதலைக்கூட்டணி 3ஆசனங்கள் தேசியகாங்கிரஸ் 1ஆசனம் நல்லாட்சிக்கான தேசியமுன்னணி 1ஆசனம் ஸ்ரீல.சு.கட்சி 1 ஆசனம் சுயேச்சைக்குழுஇரண்டு 1ஆசனம்  சுயேச்சைக்குழுமூன்று  1ஆசனம்  என அமைந்துள்ளது.
கல்முனை மாநகர சபையில் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களை கொண்ட 41 ஆசனங்களுக்கிடையே வாக்கெடுப்பு இடம்பெறவிருக்கின்றது. வாக்கெடுப்பில் கட்சிகள் என்பதற்கு அப்பால் முஸ்லிம்கள் தரப்பில் 28 உறுப்பினர்களும் தமிழர்களது தரப்பில் 13 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.
கூடுதல் ஆசனங்களை கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகளான ஐ.தே.க. மற்றும் அ.இ.ம.கா. என்பன தமக்கிடையே முதல்வருக்கான போட்டிகளை ஏற்படுத்தினால் முன்னொருபோதுமில்லாதவகையில் தமிழ்தரப்புக்கு தலைமையைப் பெறும் வாய்ப்புக்கள் தென்படுவதை அவதானிக்கமுடிகின்றது.
  மாற்று கட்சிகளுக்கு ஆட்சியமைக்க தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்கக்கூடாது என்ற கருத்து பரவலாக காணப்படுவதுடன், தமிழ் தரப்பு தனித்துவமாக செயற்பட வேண்டும் என்ற கருத்தே  கல்முனை பிரதேச தமிழர்களிடம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

By admin