கல்முனை மாநகரசபை அமர்வு; தமிழ் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு, ஒருமித்து முடிவெடுப்பதே எமக்கு ஆரோக்கியமானது!

-அரவிந்தன் வேதநாயகம்-

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்து ஐம்பது நாட்கள் கடந்துவிட்டநிலையிலும் பல சபைகள் இன்னும் ஆட்சியமைத்து அமர்வுகளைத்தொடங்கவில்லை. ஆட்சியமைக்க எந்தக்கட்சியும் பெரும்பான்மையை கொண்டிருக்காத கிழக்கு மாகாணத்தின் 32 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர்களை தெரிவு செய்யும்பொருட்டு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் முதல்நாள் அமர்வுகள் இடம்பெற்று வாக்கெடுப்பு முறையில் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டுவருவது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் கல்முனை மாநகர முதல்வர், பிரதி முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான அமர்வு ஏப்ரல் 2ல் நடைபெறவிருக்கின்றது.

கல்முனை மாநகர சபையில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களை கொண்ட 41 ஆசனங்களுக்கிடையே வாக்கெடுப்பு இடம்பெறவிருக்கின்றது. வாக்கெடுப்பில் கட்சிகள் என்பதற்கு அப்பால் முஸ்லிம்கள் தரப்பில் 28 உறுப்பினர்களும் தமிழர்களது தரப்பில் 13 பேரும் வாக்களிப்பார்களென்று எதிர்பார்கப்பட்டுகின்றநிலையில் முன்னொருபோதுமில்லாதவகையில் தமிழ்தரப்புக்கு தலைமையைப் பெறும் வாய்ப்புக்கள் தென்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

கூடுதல் ஆசனங்களை கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகளான ஐ.தே.க. மற்றும் அ.இ.ம.கா. என்பன தமக்கிடையே முதல்வருக்கான போட்டிகளை ஏற்படுத்தி கொள்ளுமாக இருந்தால் இது சாத்தியமானதே.

மேற்படி சந்தர்ப்பமொன்றுவாய்க்கின்றபோது அதனை தமிழர் தரப்பு சாத்தியபடுத்திகொள்ளுமா என்பதே மக்களின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது. போனஸ் உறுப்பரிமைமூலம் தமிழ் கட்சியில்  உள்நுழைந்த இரு   உறுப்பினர்கள்   இந்நிலையில் முஸ்லிம் அமைச்சர்களை சந்தித்து பேசியிருந்த விடயம்  மக்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அமைச்சர்களுடன் இவ்வாறான சந்திப்புக்களை எந்த தமிழ் கட்சி எந்த தமிழ் உறுப்பினர்கள்  மேற்கொள்வதையும் கல்முனை பிரதேச தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழர்கள் கல்முனை மாநகர சபையில் ஒரு பிரதான வகிபாகத்தைகொண்டிருக்கின்றர் என்பதை உணர்ந்துகொள்ள முடியாத்தன்மையே இவ்வாறான நடவடிக்கைக்கு பிரதான காரணமாக அமைகின்றது. எந்தவொரு முஸ்லிம் கட்சிகளும் பகிரங்க அழைப்பொன்றை விடுக்காதநிலையில் இவ்வாறான சந்திப்புக்கள் இடம்பெறுவதையோ அல்லது இரகசிய ஒப்பந்தங்கள்மூலம் முஸ்லிம் கட்சிகளுக்கு ஆதரவு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதையோ தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துவதும், பிரதிநிதிகளை ஒரு தலைமையின்கீழ் ஒன்றிணைப்பதும் கல்முனை பிரதேச இளைஞர் அமைப்புக்களதும் மற்றும் பொது அமைப்புக்களதும் கடமையாகும். தேர்தலுடன் கடமை முடிந்து விடவில்லையென்பதையும் அதன் அறுவடை மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதும் தங்களது பொறுப்பென்பதை நினைவில் நிறுத்தி செயற்படவேண்டிய தருணமிது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

கட்சிகள் முரண்பாடுகள் என்பதற்கப்பால் கல்முனை மாநகரசபை அனைத்து தமிழ் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு ஒருமித்து முடிவெடுப்பதையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் இதுவே ஆரோக்கியமான விடயமுமாகும்.

கல்முனையை பொறுத்தமட்டில் தமிழரொருவர் எந்தக்கட்டியின் பிரதிநிதியாக இருந்தாலும் அவருடைய தேவை கல்முனைவாழ் தமிழர்களது எதிர்பார்ப்புக்களை ஈடு செய்வதாக இருக்கவேண்டுமென்பது காலத்தின் கட்டாயமென்பதை யாவரும் அறிவர். அந்த அடிப்படையில் அனைவரும் ஒருமித்து முதல்வர் வேட்பாளராக பொருத்தமான ஒருவரை முன்மொழிந்து வெற்றிபெற வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பது வாக்களித்த கல்முனை மக்களது எதிபார்பும், வெற்றி பெற்ற பிரதிநிதிகளின் கடமையுமாக இருக்கின்றது.

பூர்வீக உரிமையுள்ள கல்முனை மாநகரத்தில் முதல்வராக போட்டிபோடக்கூடிய உரிமையும் தகுதியும் தமிழர் தரப்புக்கு இருக்கும்போது மற்றவர்களுக்கு ஆதரவளித்து அவர்களை அரியாசனம் ஏற்ற வேண்டிய தேவை இல்லை வெற்றியோ தோல்வியோ நமது தனித்துவத்துடன் முயற்சிக்க வேண்டியது எமது கடமையாகும்.

இதே வேளை சாய்ந்தமருது மக்கள் அவர்களின் தனியான பிரதேச சபை அமைக்கும் கோரிக்கையில் உறுதியாக உள்ளதால் அவர்கள் தங்களின் தனித்துவத்தை காட்டும்வகையில் யாருக்கும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்ற கருத்துக்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

By admin