வட கொரியா தலைவர் கிம் ஜொங் உன்னுடன் சீன அரசுத் தலைவர் பேச்சுவார்த்தை…..

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், வட கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டித் தலைவரும் தேசிய அவைத் தலைவருமான கிம் ஜொங் உன், மார்ச் 25 முதல் 28ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வமற்ற பயணம் மேற்கொண்டார்.

பயணத்தின் போது, ஷிச்சின்பிங் அவருடன் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷிச்சின்பிங் தம்பதி கிம் ஜொங் உன் தம்பதிக்கு வரவேற்பு விருந்தளித்து, அவர்களுடன் சேர்ந்து கலை நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் அரசவையின் தலைமை அமைச்சருமான லீகெச்சியாங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் மத்திய கமிட்டி செயலகத்தின் உறுப்பினரும் வாங் ஹுநிங், துணை அரசுத் தலைவர் வாங் ச்சீஷான் ஆகியோர் தனித்தனியாக தொடர்புடைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கிம் ஜொங் உன்னுடன் சீன அரசுத் தலைவர் பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தையில் பேசிய ஷிச்சின்பிங், முதன்முறையாக சீனப் பயணம் மேற்கொண்டுள்ள கிம் ஜொங் உன்னுக்கு வரவேற்பு தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் மத்திய இராணுவ ஆணையத் தலைவராகப் பதவியேற்றதற்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பிய கிம் ஜொங் உன்னுக்கு ஷிச்சின்பிங் நன்றி தெரிவித்தார். மேலும், சிறப்பான நேரத்தில் நீங்கள் மேற்கொண்ட இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனா மற்றும் வட கொரியாவின் ஆளும் கட்சிகளுக்கிடையேயான உறவுக்கும் இருநாட்டுறவுக்கும் வட கொரியா அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. இதனைச் சீனா பாராட்டுகிறது என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.

கிம் ஜொங் உன் பேசிய போது, அண்மையில் சீனாவில் முக்கியமான மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. அண்மையில் இரு கூட்டத் தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. கட்சி மற்றும் மக்களின் ஆதரவுடன் மையத் தலைவராக மாறி, மீண்டும் அரசுத் தலைவராகவும், மத்திய இராணுவ ஆணையத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு, வட கொரிய-சீன நட்புறவின் பாரம்பரியத்தின்படி நேரில் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், தற்போது தீவிரமாக முன்னேறி வரும் கொரிய தீபகற்ப நிலைமையில் பல முக்கிமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து உரிய நேரத்தில் உங்களிடம் நேரில் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஷிச்சின்பிங் பேசுகையில், சீன மற்றும் வட கொரியாவின் பாரம்பரிய நட்புறவானது, இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் முந்தைய தலைவர்கள் நேரில் உருவாக்கி வளர்த்ததாகும். இரு தரப்புகளுக்கும் இது மதிப்புக்குரிய செல்வமாகும். முன்பு, தமது முந்தைய தலைவர்கள் கூட்டு மேன்மை மற்றும் ஆழ்ந்த நட்பின் அடிப்படையில், பரஸ்பரம் நம்பிக்கையுடன் ஆதரவு அளித்தனர். இது, சர்வதேச உறவு வரலாற்றில் ஒரு தலைச்சிறந்த மாதிரியாகத் திகழ்கிறது. இதனால், சீனா மற்றும் வட கொரியாவின் தலைவர்கள் நெருக்கமான பரிமாற்றத்தை நிலைநிறுத்தி வருகின்றனர். நீண்டகால நடைமுறைப் போக்கில், இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகள் பரஸ்பரம் ஆதரவு அளித்து ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றன. இது, சோஷலிச லட்சியத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. நானும் கிம் ஜொங் உன்னும் சீன மற்றும் வட கொரிய உறவு வளர்ச்சியை நேரில் பார்த்தவர்களாவர். இரு நாட்டு பாரம்பரிய நட்பைத் தொடர்ந்து மேலும் நன்கு வளர்க்க வேண்டும் என்று நாங்கள் பல முறை தெரிவித்துள்ளோம். வரலாறு மற்றும் நடைமுறையின் அடிப்படையில், சர்வதேச சமூக நிலைமை மற்றும் இரு நாட்டுறவில் காலூன்றி நின்று மேற்கொண்டுள்ள உத்திநோக்கிற்குரிய தேர்வு இது ஆகும். ஒரேயொரு சரியான தேர்வும் இது ஆகும். இந்த உறவு, எக்காலத்திலும்  எதன் பொருட்டும் மாறாது என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு இரு நாட்டு நட்பு ஒத்துழைப்பு உறவில் உயர்வாக கவனம் செலுத்தி வருகின்றன. இரு நாட்டுறவை வளர்ப்பது, எப்போதும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் உறுதியாக ஊன்றி நிற்கும் கொள்கையாகும். வட கொரியாவுடன் இணைந்து, முதற்கட்ட விருப்பத்தை மறந்து விடாமல், கைகோர்த்து முன்னேறி, இரு நாட்டுறவை நீண்டகாலமாகவும் சீராகவும் வளர்ப்பதைத் தூண்டி, இரு நாடுகள் மற்றும் மக்களுக்கு நன்மை உருவாக்கி,  பிரதேசத்தின் அமைதியான நிதானமான வளர்ச்சிக்கு புதிய பங்காற்ற சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார். இந்நோக்கத்தின் ஒரு பகுதியாக, இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கிடையேயான பரிமாற்றம் தலைமை பங்காற்ற வேண்டும். உயர் அதிகாரிகளுக்கிடையேயான பரிமாற்றமானது, இரு நாட்டு உறவு வளர்ச்சி வரலாற்றில் மிக முக்கிய தலைமை மற்றும் முன்னேற்ற பங்காற்றி வருகின்றது. புதிய நிலைமையில், கிம் ஜொங் உன்னுடன் இணைந்து, பரஸ்பரப் பயணம், சிறப்புத் தூதர்களை அனுப்புதல், பரஸ்பரம் கடிதங்களை அனுப்புதல் உள்ளிட்ட பல்வகை வடிவங்களில், தொடர்பை நிலைநிறுத்த விரும்புகிறேன் என்றும், இரண்டாவதாக, உத்திநோக்கு சார் தொடர்பு வழிமுறையில், முக்கிய பிரச்சினைகள் குறித்து, அடிக்கடி ஆழந்த முறையில் கருத்துக்களைப் பரிமாற்றம் மேற்கொள்வது என்பது, இரு கட்சிகளின் மேன்மை மிக்க பாரம்பரியமாகும். கட்சிகளுக்கிடையேயான பரிமாற்றத்தில் முக்கியப் பங்காற்றி, பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தொடர்பை அதிகரிக்க வேண்டும் என்றும், மூன்றாவதாக, அமைதி வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக தூண்ட வேண்டும். தற்போது, சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் புதிய காலத்தில் நுழைந்துள்ளது. வட கொரியாவின் சோஷலிச கட்டுமானமும் புதிய காலத்தில் நுழைந்துள்ளது. சீனத் தரப்பு, வட கொரியாவுடன் இணைந்து, கால ஓட்டத்தின் வளர்ச்சிக்குப் பொருந்திய வகையில், அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி என்ற கோட்பாடுகளில் ஊன்றி நின்று, இரு நாட்டு மக்களுக்கு இடைவிடாமல் நலன்களை உருவாக்கி, பிரதேசத்தின் அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்காற்ற விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார். நான்காவதாக, சீன மற்றும் வட கொரியாவின் பாரம்பரிய நட்புறவை முன்னேற்றும் பொது மக்களின் கருத்து என்ற அடிப்படையை உறுதிப்படுத்த வேண்டும். பல்வகை வடிவங்களில், இரு நாடுகளுக்கிடையேயான மக்களுக்கிடையேயான பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, இரு நாட்டு இளைஞர்களுக்கிடையேயான பரிமாற்றத்தை வலுப்படுத்தி, இரு நாட்டு தலைச்சிறந்த நட்புறவை தொடர்ந்து வெளிகொணர வேண்டும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

வட கொரிய-சீன நட்புறவு,  இரு நாட்டுக் கட்சிகள் மற்றும் இரு நாட்டு உறவின் வளர்ச்சி குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் ஷிச்சின்பீங் முக்கிய கருத்துக்களைத் தெரிவித்தார். ஷிச்சின்பீங்கின் கருத்துக்கள், எனக்கு அதிகமான ஊக்கம் மற்றும் வழிகாட்டு தலைத் தந்துள்ளது. இரு தரப்புகளின் முந்தைய தலைவர்கள் கூட்டாக உருவாக்கி வளர்த்துள்ள வட கொரிய-சீன நட்புறவு உறுதியாக மாறப்போவதில்லை. புதிய நிலைமையின் பின்னணியில், வட கொரிய-சீன நட்புறவைப் பேணி வளர்ப்பது, வட கொரியாவின் நெடுநோக்குத் தெரிவாகும். இது, எப்போதும் மாறப்போவதில்லை. இந்த முறை எனது பயணத்தின் போது, சீனத் தோழர்களைச் சந்தித்து, அவர்களுடனான நெடுநோக்குத் தொடர்புகளை வலுப்படுத்தி, பாரம்பரிய நட்புறவை ஆழமாக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில், ஷிச்சின்பீங்கினை அடிக்கடி சந்திக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கிடையே சிறப்புத் தூதர்களை அனுப்புவது, கடிதங்கள் எழுதுவது முதலிய வழிமுறைகளின் மூலம், நெருக்கமாக தொடர்புமேற்கொள்ள வேண்டும். உயர் நிலை தலைவர்களின் பேச்சுவார்த்தை மூலம், இரு கட்சிகள் மற்றும் நாடுகளின் உறவினைப் புதிய வளர்ச்சி நிலைக்குத் தூண்ட வேண்டும் என்று கிம் ஜொங் உன் தெரிவித்தார்.

இதனையடுத்து, இரு நாடுகளின் நிலைமை குறித்து இரு தலைவர்களும் விளக்கிக்கூறினர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில், சோஷலிச சமூகத்தின் நவீனமயமாக்கத்தைப் பன்முகங்களிலும் உருவாக்கும் மாபெரும் இலக்கு வகுக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டுக்குள், ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாகக் கட்டியமைக்க வேண்டும். 2035ஆம் ஆண்டுக்குள், சோஷலிச நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்க வேண்டும். இந்நூற்றாண்டின் மத்திய காலத்தில், வலிமை, ஜனநாயகம், நாகரிகம், நல்லிணக்கம் மற்றும் அழகு வாய்ந்த நவீனமயமான சோஷலிச வல்லரசாக, சீனா கட்டியமைக்கப்படும்.  சீனாவின் பல்வேறு தேசிய இனத்தவர்களுடன் சேர்ந்து புத்தாக்கத்துடன் செய்து பாடுபட்டு, இன்னல்களைச் சமாளித்து, சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியை விரைவுபடுத்தி, சீனக் கனவை நனவாக்க நாங்கள் முயற்சி செய்வோம். கடந்த சில ஆண்டுகளில், கிம் ஜொங் உன் வட கொரிய கட்சிக்கும் மக்களுக்கும், தலைமை தாங்கி, பொருளாதார வளர்ச்சி, மக்கள் வாழ்க்கையின் மேம்பாடு போன்ற துறைகளில், ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதிய சாதனைகளைப் படைத்துள்ளீர். வட கொரியாவின் அரசியல் நிதானமாக வளர்ந்து, பொருளாதாரம் உயர்ந்து, மக்கள் இன்பமாக வாழ வேண்டுமென்று நாங்கள் விரும்புகின்றோம். வட கொரிய உச்ச மக்கள் அவையின் நிரந்தர தலைவரான உங்களுடைய தலைமையில் வட கொரிய மக்கள், சோஷலிய பாதையில் நடைபோட்டு, பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு நீங்கள் பாடுபடுவதற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம் என்று ஷிச்சின்பீங் தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டிற்குப் பிறகு இது வரை, ஷிச்சின்பீங் தலைமையிலான, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மாபெரும் அரசியல் துணிவு மற்றும் உயர்வான கடமை உணர்வின் அடிப்படையில் பங்காற்றி வருகிறது. அதோடு இக்கமிட்டி புதிய சிந்தனைகளையும் கண்ணோட்டங்களையும் முன்வைத்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால், நீண்டகாலமாகக் காணப்பட்ட இன்னல்களும் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நெறிவரை, சீனத் தேசிய நிலைமைக்குப் பொருந்திய சரியான பாதையாகும். குறிப்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பீங், கட்சியை நிர்வகித்து, கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்தி, கட்சியின் கட்டுமானத்தைப் பெரிதும் அதிகரித்து, பல்வேறு துறைகளிலான பணிகளை முழுமையாக நனவாக்கியுள்ளார். தற்போது, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, நடைமுறைக்கு எதிரான சீர்கேடுகளை நீக்கும் போராட்டத்தில் வட கொரியக் கட்சி ஈடுபட்டு வருகிறது. ஓரளவு வசதியான சமூகத்தைப் பன்முகங்களில் கட்டியமைத்து, சோஷலிச சமூகத்தின் நவீனமயமாக்க வல்லரசைக் உருவாக்கும் முன்னேற்றப் போக்கில், சீனா தொடர்ந்து மாபெரும் புதிய சாதனைகளைப் படைக்க கிம் ஜொங் உன் வாழ்த்து தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் கொரிய தீபகற்ப நிலைமை குறித்து அவர்கள் இருவரும் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஷிச்சின்பிங் பேசுகையில், இவ்வாண்டில் கொரிய தீபகற்ப நிலைமையில் காணப்பட்ட ஆக்கப்பூர்வ மாற்றத்துக்கு வட கொரியா முக்கிய முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனைச் சீனா பாராட்டுகிறது. இப்பிரச்சினை குறித்து, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை இலக்கை நனவாக்கி, அமைதியைப் பேணிக்காத்து, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனா ஊன்றி நிற்கிறது. கொரிய தீபகற்பத்திலுள்ள வட மற்றும் தென் இருதரப்புகள் உறவை மேம்படுத்த பல்வேறு தரப்புகள் ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். இப்பிரச்சினையில் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வ பங்காற்றி, வட கொரியா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ள விரும்புகிறது என்று தெரிவித்தார்.

கிம் ஜொங் உன் கூறுகையில், கொரிய தீபகற்ப நிலைமை சீராகி வருகிறது. இங்குள்ள நிலைமையைத் தணிவு செய்யும் நடவடிக்கையை முன்முயற்சியுடன் மேற்கொண்டு, அமைதிப் பேச்சுவார்த்தை பற்றிய ஆலோசனையை முன்வைத்துள்ளோம். முன்னாள் அரசுத் தலைவர் கிம் இல் சுங் மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் கிம் சொங் இல் அவர்களின் அறிவுரைக்கிணங்க, கொரிய தீபகற்ப அணு ஆயுதமின்மை என்பது, எங்கள் மாறாத நிலைப்பாடு என்று தெரிவித்தார். மேலும், வட-தென் கொரிய உறவை இணக்கமான ஒத்துழைப்பு உறவாக மாற்ற பாடுபடுவோம். வட-தென் கொரிய தலைவர்கள் பேச்சுவார்த்தையையும் வட கொரிய-அமெரிக்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தையையும் நடத்துவோம். தென் கொரியா மற்றும் அமெரிக்கா நல்லெண்ணத்துடன் எங்கள் முயற்சிக்கு பறுமொழி அளித்து, அமைதியான சூழலை உருவாக்கி, அமைதியை நனவாக்கும் வகையில் உகந்த நடவடிக்கையை மேற்கொண்டால், கொரிய தீபகற்ப அணு ஆயுதமின்மை பிரச்சினை தீர்க்கப்பட முடியும். இந்தப் போக்கில் சீனாவுடன் நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தையையும் கொரிய தீபகற்பத்தின் அமைதியையும் நிலைநிறுத்த விரும்புவதாகவும் கிம் ஜொங் உன் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு முன், ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் கிம் ஜொங் உன்னுக்கு வரவேற்பு விழாவை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு பின், ஷிச்சின்பிங்கும் அவருடைய மனைவி ப்பங் லீயுவானும் கிம் ஜொங் உன் தம்பதிக்கு வரவேற்பு விருந்தளித்தனர். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், உயிராற்றல் மிக்க வசந்த விழாவின் போது, தோழர் கிம் ஜொங் உன் மற்றும் ரி சொல்ச்சு அம்மையார் சீனாவில் அதிகாரப்பூர்வமற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர். இப்பயணம், இரு நாடுகளின் பரஸ்பர பரிமாற்றம், ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குப் பெரும் முக்கியத்துவம் வாயந்தது. இரு கட்சிகள் மற்றும் இரு நாட்டு உறவு, புதிய வரலாற்றுக் கட்டத்தில் புதிய காலடி எடுத்துவைப்பதை இப்பயணம் முன்னேற்றும். இப்பிரதேசத்தின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிக்கும். நான், கிம் ஜொங் உன்னுடன் மனம் திறந்த நட்புப் பேச்சுவார்த்தையை நடத்தினேன். சீன-வட கொரியாவின் பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து வளர்ப்பது இரு தரப்பின் கூட்டு நலனுக்கும் பொருந்தியது. இது இரு தரப்பின் கூட்டு தொலைநோக்கு தேர்வாகும் என்பது எங்களின் ஒருமித்த கருத்தாகும்.  சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை எப்படி மாறினாலும், உலகின் வளர்ச்சி முன்னேற்றப்போக்கையும் சீன-வட கொரிய உறவின் முன்னேற்றப்போக்கையும் நாம் உறுதியாக பற்றிமுன்னெடுத்துச் செல்வோம். இரு தரப்புக்குமிடையே உயர் நிலைத் தொடர்பை வலுப்படுத்தி தொலைநோக்குப் பரிமாற்றத்தை ஆழமாக்கிப் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை விரிவாக்கி இரு நாட்டு மக்கள் மற்றும் பல்வேறு நாட்டு மக்களுக்கும் நலன் தருவோம் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

கிம் ஜொங் உன் உரைநிகழ்த்திய போது கூறியதாவது, பெரும் மாற்றம் ஏற்பட்ட கொரிய தீபகற்ப நிலைமையை எதிர்நோக்கி, தீபகற்பத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை முன்னேற்றி வட கொரிய-சீன நட்புறவைத் தொடர்ந்து வளர்க்கும் விருப்பத்துடன், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளேன். சீனா, என்னுடைய முதலாவது பயணமிடமாகும். நான் இரு தரப்புறவுக்குப் பெரும் முக்கியத்துவமளித்துள்ளதை இது வெளிக்காட்டியுள்ளது. வட கொரிய-சீன உறவின் வளர்ச்சி, பரஸ்பர நாட்டு நிலைமை, தீபகற்ப அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சீனப் பொது செயலாளர் ஷிச்சின்பிங்குடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளேன். ஷிச்சின்பிங்குடனான இந்த முதலாவது பேச்சுவார்த்தை மூலம், வட கொரிய-சீன நட்புறவில் புதிய சாதனைகள் வரவேற்கப்படும் என்றும் தீபகற்பத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மை முன்னேற்றப்படும் என்றும் நம்புவதாக கிம் ஜொங் உன் தெரிவித்தார்.

பயணத்தின் போது, ஷிச்சின்பிங் தம்பதி, தியோ யு தைய் தேசிய தங்கும் விடுதியில் கிம் ஜொங் உன் தம்பதிக்கு மதிய விருந்தை நடத்தினர். பாரம்பரிய சீன-வட கொரிய நட்புறவின் வளர்ச்சிக்குத் தியோ யு தைய் தேசிய தங்கும் விடுதி சாட்சியாக இருக்கிறது. இரு கட்சி மற்றும் இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையே உள்ள நெருங்கிய நட்புறவு நமக்குச் சிறந்த மாதிரியை வழங்கியுள்ளது. கிம் ஜொங் உன் தலைவரும் ரி சொல்ச்சு அம்மையாரும் சீனாவில் அடிக்கடி பயணம் மேற்கொள்வதை நாம் வரவேற்கிறோம் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

இரு நாட்டு நட்புறவு அரிதானது. பொதுச் செயலாளர் ஷீச்சின்பிங்குடன் இணைந்து, முந்தைய தலைமுறை தலைவர்களின் கருத்துகளைப் பின்பற்றி, கடும் புயலைக் கடந்தும் மாறாது நிலைத்து நிற்கும் நட்புறவாக இருத்தரப்புறவைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும். புதிய காலத்தில், புதிய உயர்வுக்கு இரு நாட்டுறவை முன்னேற்ற வேண்டும் என்று கிம் ஜொங் உன் தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு சீன அறிவியல் கழகம் எட்டிய சாதனை கண்காட்சியை கிம் ஜொங் உன் பார்வையிட்டார். அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் புத்தாக்கத துறைகளில் சீனா எட்டிய சாதனைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அதன் பின் சீனாவின் வளர்ச்சி சாதனைகள் பற்றிய தன்னுடைய கருத்தை பார்வையாளர் குறிப்பேட்டில் பதிவு செய்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் உறுப்பினரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அலுவலகத்தின் தலைவருமான டிங் சுயேச்சே சியாங், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினர் யாங் ச்சியே சீ, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் மற்றும் சட்ட விவகாரக் கமிட்டி தலைவருமான குவே ஷெங் குங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பரப்புரை துறையின் தலைவருமான ஹுவாங் குன் மிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பெய்ஜிங் நகராட்சியின் கட்சி கமிட்டி செயலாளருமான சாய் ஜீ, சீன அரசவை உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகியோர், தொடர்புடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

வடகொரியத் தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் துணைத் தலைவரும், அமைப்புத் துறையின் தலைவருமான சோ ருங் ஹேய், வடகொரியத் தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் துணைத் தலைவரும், பரப்புரைத் துறையின் தலைவருமான பியாவ் குவாங் ஹொ, வடகொரியத் தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் துணைத் தலைவரும், உலகத் துறையின் தலைவருமான லி சூ யுங், வடகொரியத் தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் துணைத் தலைவரும், ஐக்கிய முன்னணி விவகார துறையின் தலைவருமான கிம் யுங் ச்சோல், வடகொரிய வெளியுறவு அமைச்சர் லி யுங் ஹொ ஆகியோர், கிம் ஜொங் உன்னுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.