ஜனாதிபதியிடம் மட்டக்களப்பு அம்பாறையில் இருந்து சேகரிக்கப்பட்ட 68 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையொப்பங்களுடன் கடிதம் கையளிப்பு- ஜனாதிபதி சாதகமான பதில்!

ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச்சேர்ந்த சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியை கோரி தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து பொது மக்களிடம் சேகரிக்கப்பட்ட கையொப்பத்துடன் பொது மன்னிப்பு வழங்கக் கோரும் கடிதம் நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது இதன் போது ஜனாதிபதியால் சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளது.

 

நேற்று ஜனாதிபதியின் இல்லத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட 68ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை ஜனாதிபதி பெற்றுக்கொண்டதுடன் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளிடமே ஜனாதிபதி சாதகமான இப்பதிலை அளித்துள்ளார்.

 

தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் சோமசூரியம் திருமாறன்இ ஜனார்த்தனன்இ ஆனந்த சுதாகரனின் இருபிள்ளைகளும் இந்த பிள்ளைகளின் பாட்டியும் ஜனாதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து பிள்ளைகளினதும் மக்களினதும் மனநிலையை எடுத்துக்கூறியுள்ளனர்.

இதற்குப்பதிலளித்துள்ள ஜனாதிபதி இப்பிரச்சினையை தான் அறிந்துள்ளதாகவும்இ சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தங்களிடம் தெரிவித்தாக சந்திப்பில் கலந்து கொண்ட சோ. திருமாறன் தெரிவித்தார்.

 

இதேவேளை ஆனந்த சுதாகரனின் இரு குழந்தைகளும்இ அவர்களின் அம்மம்மாவும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களுக்கும் இந்த நடவடிக்கையை முன்னெடுத்த தமிழ் இளைஞர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

 

இளைஞர்களால் கையெழுத்து சேகரிப்பு தொடந்து நடைபெற்று வருகிறது இன்றும் நாளையும் மண்டூர் மற்றும் மூதூர் பிரதேசங்களிலும் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.  சாதகமான பதிலை வழங்கிய ஜனாதிபதிக்கு இளைஞர்கள் நன்றியினையும் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

By admin