அம்பாறை மாவட்டத்திலுள்ள இலங்கையின் ஒரேயொரு தொன்மைவாய்ந்த மீனாட்சி அம்மன் ஆலயம்!

கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் நிந்தவூர் கிராமம் உள்ளது. இந்த நிந்தவூர் கிராமத்தின் தெற்கு எல்லையில் மேற்குப் புறமாக வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு மேட்டுநிலமாகவும், தென்னை மா, ஆலை, அரச மரங்கள் நிறைந்த சோலையாகவும் ஒரு பகுதி காணப்படுகின்றது. அதனை மாட்டுப்பள்ளம் என்று அழைக்கின்றனர்.

அமைதியும் அழகும் நிறைந்த அந்த இடத்தின் நடுவேதான் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. பாண்டிய மன்னர் ஆட்சிக் காலத்தின் போது அவனது படையணி ஒன்று அந்த இடத்தில் நிலை கொண்டிருந்ததாகவும் அந்தப் படையிலுள்ளவர்கள் வணங்குவதற்காக அந்த இடத்தின் ஒரு பகுதியில் மீனாட்சி அம்மனை வைத்து வழிபட்டு வந்ததாகவும் இவ் ஆலய வரலாறு பற்றி அறியக் கிடைக்கின்றது.

பாண்டிய மன்னருக்குப் பின்னர் வந்த போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலத்தில் அந்த இடத்திலிருந்த மீனாட்சி அம்மன் ஆலயம் சிதைக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அதன் பின்னர் அப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களால் மீண்டும் மீனாட்சி அம்மன் ஆலயத்தை சீரமைத்து வழிபாட்டை தொடர்ந்து வழிபட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நுழைந்தவுடன் மனதிற்கு ஓர் ஆத்ம திருப்தி கிடைப்பதுபோல் உணர முடியும். அம்மனை தரிசிக்க வரும் அடியார்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதாகக் கூறுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இவ் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இலங்கையின் பல பகுதியிலிருந்தும் மீனாட்சி அம்மனை தரிசிக்க மக்கள் வருகின்றார்கள். விசேடமாக வெள்ளிக்கிழமை, பௌர்னமி தினங்களில் விஷேட பூசைகள் அன்னதான நிகழ்வுகள் இங்கு நடைபெறுகின்றது. மீனாட்சி அம்மனுக்கு மட்டுமல்ல நாக வழிபாட்டையும் இங்கு விசேடமாக காணக்கூடியதாக இருக்கின்றது. சகல இன மக்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஷஷகோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆனால் சுற்றிவர குடிமனை எதுவுமே இல்லாத பகுதியாக உள்ள இந்த இடத்தில் மீனாட்சி அம்மன் அமர்ந்திருந்து தம்மை நாடிவருவோரின் குறைகளை தீர்த்து வருகின்றார்.

மாட்டுப்பள்ளம் மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஓர் அரங்காவலர் சபை ஏற்படுத்தப் பட்டுள்ளது. அம்மபாரை மாவட்டத்தின் பல கிராமங்களையும் சேர்ந்தவர்கள் இச்சபையில் இணைந்து ஆலய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் அருளை உணர்ந்த பலர் இவ்வாலயத்தை புணரமைப்பு செய்வதற்கான நிதி உதவிகளை வழங்கி தற்பொழுது புதிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதற்கான விக்ரகங்களும் தருவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்திற்குள் பதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தை முடித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாலயத்தின் அரங்காவலர் சபையினர் கருத்துத் தெரிவிக்கையில் இந்த ஆலயத்தைச் சுற்றி கிராமங்கள் இல்லாததால் இரவு வேளைகளில் யானைகள் வந்து சேதப்படுத்துவதாகவும், காவலாளிகளை நியமிக்கத் தேவையான பாதுகாப்பு வசதிகள், நிதி வசதிகள் இல்லையெனவும் கூறுகின்றனர். ஆலயத்தின் தேவைகள் இன்னும் உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய மக்கள் முன்வந்து உதவவேண்டும் எனவும் கோருகின்றனர்.

இவ்வாலயத்திற்கு சுற்றுமதில் மணிக்கோபுரம், வர்ணப் பூச்சு வேலைகள், பாதைகள் சீராக்கல், அன்னதான மடங்கள் போன்றவை செய்யப்படவேண்டி உள்ளது. இலங்கையில் உள்ள ஒரேயொரு மீனாட்சி அம்மன் ஆலயம் என்ற பெருமை கொண்டு தமிழர்களின் சரித்திரத்தை தாங்கி நிற்கும் வரலாற்றுப் பெருமை மிக்கும் இவ் ஆலயத்தைப் பாதுகாத்து சிறப்புமிக்க ஆலயமாக மிளிரவைக்க அனைவரும் பங்களிப்பு செய்து கும்பாபிஷேகத்தை நிகழ்த்த முன்வர வேண்டும் என ஆலய அறங்காவலர் சபை தெரிவித்தனர்.

ஆலய அறங்காவலர் சபை தொ.பே இலக்கங்கள்  -0774468244 , 0771584557 , 0716076595

(சௌவியதாசன்)

 

By admin