காரைதீவு -இன்று சுயேச்சை உறுப்பினர்கள் மக்கள்முன் சத்தியப்பிரமாணம்!
(காரைதீவு  நிருபர் சகா)

கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் காரைதீவுப்பிரதேசசபைக்கு சுயேச்சை அணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் இருவரும்  இன்று  (24) சனிக்கிழமை பொதுமக்கள்முன் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

 
காரைதீவு விபுலானந்த மணிமண்டபத்தில்  இச்சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது என்று சுயேச்சைக்குழுத்தலைவர் எஸ்.நந்தகுமார் தெரிவித்தார்.
பொதுமக்களின் வேண்டுகோளின்பேரில் மகாசபையின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட சுயேச்சைஅணி கடந்ததேர்தலில் 2மாதகாலத்துள் 1985வாக்குகளைப்பெற்று 2ஆசனங்களைப்பெற்றுள்ளது.
சுயேச்சைஅணியில் போட்டியிட்ட  அணியின் மூத்தபிரஜை ஆ.பூபாலரெத்தினம் மற்றும் விஸ்ணுஆலய தலைவர்  இராசையா மோகன் ஆகியோர் முதலாம்வருட உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
கிழக்குமாகாண நீர்ப்பாசனத்திணைக்கள மாகாணப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமாகிய  எந்திரி சி.திலகராஜன் உதவிக்கல்விப்பணிப்பாளரும் சமாதானநீதிவானுமாகிய வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் முன்னிலையில் இச்சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.
நிகழ்விற்கு பொதுமக்கள் ஆதரவாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். வாக்களித்த பொதுமக்கள்முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவிருப்பது வரலாற்றுநிகழ்வாகும் என தலைவர் ச.நந்தகுமார் தெரிவித்தார்.
இதேவேளை சுயேச்சை அணியில் விருப்பம் தெரிவித்த எண்மருக்கு பிரதிவருடமும் இருஉறுப்பினர் வீதம் உறுப்பினர்பதவி சுழற்சிமுறையில்பகிர்ந்தளிக்கப்படவிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பும் அங்கு வெளியாகவுள்ளது.
குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் உறுப்பினராக வரவிரும்பாத மகளிருக்கான ஊக்குவிப்புத்திட்டம் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படவிருக்கிறது.
காரைதீவு பிரதேசசபையின் ஆட்சியமைப்பது தொடர்பாக முதற்கட்டமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கும் சுயேச்சை அணியிருக்கும் இடையே சந்திப்பொன்று மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே. அடுத்தசந்திப்பு நாளை சனிக்கிழமை இடம்பெறலாமென அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த இருஅணியினரும் மேலுமோரு அணியுமிணைந்து ஆட்சியமைக்கவுள்தாகத் தெரிகிறது.

By admin