தந்தைக்கு ஆயுள் தண்டனை ;கவலையுடன் நோயால் முடங்கிய மடிந்த தாய்;  நிர்க்கதியாகியுள்ள பிஞ்சுக் குழந்தைகள் – தொடரும் தமிழர் அவலங்கள்…..

அனைவரது  மனங்களையும் பாதித்துள்ள ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டுவரும் விடயம் கிளிநொச்சியில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற உருக்கமான அந்த நிகழ்வு .

கடந்த 10 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவரும் ஆனந்தசுதாகருக்கு  கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கியதில் இருந்து தனது கணவர் விடுதலையாகி வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த இரண்டு பிள்ளைகளின் தாயான யோகராணி  இந்த தீர்ப்பின் பேரதிர்ச்சி காரணமாக  நோயால்  பாதிக்கப்பட்டார் தாங்க முடியாத கவலையும் அதிர்ச்சியினாலும் மாரடைப்பை எதிர்கொண்டார் நாளும் பொழுதும் தனது கணவனின் ஏக்கமும் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் எண்ணி எண்ணி கண்ணீருடனும் கவலையுடனும் நோயுடன் நாட்களை நகர்திய இந்த தாய் நோயின் உச்சத்தை சந்தித்து கடந்த 15 ஆம் திகதி இரண்டு குழந்தைகளையும் அனாதைகளாவிட்டு ளம் வயதில் (37) உயிர்பிரிந்தார்.

 

விடுதலையாகி தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வாழலாம் என்ற ஒரு துளி நம்பிக்கையுடன் சிறையில் வாடிய ஆனந்தசுதாகர்  தனது மனைவிக்கு இறுதி  அஞ்சிலி செலுத்தவே  மூன்று மணித்தியாலம் மட்டும் வழங்கப்பட்டு தனது வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார். ஊயிரற்ற மனைவிக்கு அஞ்சலி செலுத்தி நிர்கதியான குழந்தைகளை எண்ணி விம்மியபடி மீண்டு சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது அனாதரவான அந்த பிஞ்சு மகள் ஏதுமறியாக அந்த குழந்தை தந்தையுடன் சிறை செல்ல அழுதுகொண்டு முயற்சித்த சம்பவம் மீண்டும் ஒரு முறை கிளிநொச்சி நோக்கி அனைவர் பார்வையையும் திரும்பச் செய்துள்ளது.

கணவர் சிறையில் இருந்ததால் தையல் வேலை செய்து தனது ஏழாம் வகுப்பில் கல்விற்கும் மகன் தணிரதன் (12 வயது)   ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மகள் சங்கீதா (10 வயது) ஆகியோரின் கல்விச் செலவுகள்   வயதான தாயுடன் குடும்ப பாரத்தையும் கவலைகளையும் சுமந்து வாழ்ந்த தாய் யோகராணியின் இழப்பால்  அனாதரவான இன்று இந்த பிள்ளைகளுக்கு வயதான  பாட்டியின் ஆதரவே உள்ளது.

தாயின் இறந்த கிரியைகள்  எட்டுநாட்கள் ஒரு மாதம் கண்மூடி திறப்பது போல்  வேகமாக கடந்துவிடும் வீட்டில் தற்போது கூடியிருக்கும் உறவினர்களும் அயலவர்களும் கலைந்து விடுவார்கள் பின்னர் இந்தப் பிள்ளைகளின் மனநிலை வேதனைகள் எவ்வாறு தீரும்  இவர்களின்  தாயின்   இழப்பு பெற்றோரின்   வெற்றிடம் யாரால் ஈடுசெய்ய முடியும் அவர்களின் தவிப்புக்கு முடிவு காண இருக்கும் ஒரு வழி சிறையில் இருக்கும் தந்தையாவது பிள்ளைகளுக்கு ஆதரவாக வீடு வந்து சேர வேண்டும் என்பதே ஆகும்.

இந்த பிள்ளைகளின் நிலைமைகளை கவனத்தில் எடுத்து மனிதாபிமான அடிப்படையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள இந்த பிஞ்சுகளின் தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள இந்த குழந்தைகளின் வாழ்வுக்கு நல்ல பதில் கூறி வழிகாட்ட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பும்  கோரிக்கையுமாகும்.

 

வடக்கு கிழக்கில் வெளிச்சத்திற்கு வராத இன்னும் எத்தனை எத்தனை குடும்பங்கள் இவ்வாறு ஏக்கத்துடனும் கவலைகளுடனும்   மரணத்தின் விளிம்பில் வாழ்வை நகர்த்தி வருகின்றார்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து  துரிதமாக நடவடிக்கை  எடுக்க வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

இந்த துயரச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாகச்  சென்று தகவல்களையும் புகைப்படங்களையும் வழங்கிய  சௌவியதாசன் அவர்களுக்கு நன்றி-

By admin