ஆலயங்கள் சமுகத்தை வளர்த்தெடுக்கவேண்டும்!
இந்துகலாசாரத்திணைக்களத்தின் கணக்காளர் காண்டீபன் உரை!
(காரைதீவு  நிருபர் சகா)
 

ஆலயங்கள் சமுகமையமாக செயற்பட்டு தான்சார்ந்த சமுகத்தை வளர்த்தெடுக்கவேண்டும்.

இவ்வாறு இந்துகலாசார சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் இந்துகலாசாரத்திணைக்களத்தின்  பிரதமகணக்காளர் கே.காண்டீபன் தெரிவித்தார்.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இந்துசமயஅறநெறிபாடசாலை மாணவர்க்கான ஆக்கத்திறன்விருது வழங்கும்விழாவில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விழா கடந்த(17) சனிக்கிழமை காரைதீவு விபுலானந்த மணிமண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கலந்துகொண்டு நந்திக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார்.

திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அங்கு கணக்காளர் காண்டீபன் மேலும் உரையாற்றுகையில்:

இந்து கலாசார திணைக்களத்தை 2015இல் பொறுப்பேற்ற பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் பலமுன்னோடித்திட்டங்களை முன்னெடுத்துவந்தார்.

அதிலொன்றுதான் இந்த விருதுவழங்கி பாராட்டும் விழா.

 

தேசியவிருதுவழங்கும் விழா!

அறநெறிமாணவர்களை மேலும் ஊக்குவிக்கும்பொருட்டு ஆக்கத்திறன்போட்டியை அறிமுகம்செய்து 3வது வருடமாக இம்முறை சிறப்பாக நடைபெறுகிறது.

பாடசாலை மட்டம் பிரதேசமட்டம் மாவட்ட மட்டம் எனத்தெரிவுகள் நடைபெற்று தேசியரீதியில் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

ஆரம்பபோட்டிகளில் 50ஆயிரம் அறநெறிமாணவர்கள் பங்குபற்றுவார்கள்.கட்டம்கட்டமாக தோற்றி தேசியப்போட்டிகளுக்கு 1000மாணவர்கள் தெரிவாவர். அதில் 350பேருக்கு தேசிய ஆக்கத்திறன்விருது வழங்கப்படுகிறது.

சமுகத்தின்அடையாளம் எது?

ஒருசமுகத்தின் அடையாளமாக அதன் கலைகலாசாரங்கள் மிளிர்கின்றன. அதற்காக நாம் வடக்கில் தோன்றிய ஆறுமுகநாவலர்பெருமான் நாமத்தில் அங்கு பல திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். அதேபோல் கிழக்கில்தோன்றிய முத்தமிழ்வித்தகர் சுவாமிவிபுலாநந்தஅடிகளார் நாமத்தில் இங்கும் பல திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.

அவரது நாமத்திலுள்ள இந்த மணிமண்டபத்தை மறுசீரமைப்பதுடன் பலகற்றைநெறிகளை ஆரம்பிக்கவிருக்கின்றோம். சுவாமிகளது பிறந்தவீட்டை புனருத்தாரணம்செய்யவும் உதவியிருக்கின்றோம்.

பாதநமஸ்காரம் ஏன்?

இந்துபண்பாட்டின்படி மூத்தோர் பாதங்களில் குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்குவதென்பது நிறைந்த பண்பை வழங்கும். இதில் கீழ்ப்படிவான பண்புகள் தோன்றும். மதிப்புமரியாதை தோன்றும்.

உண்மையில் அறநெறி ஆசிரியர்களுக்கு மாத்திரமே அரசநிதி வழங்கப்படுகின்றது. நாம் கொடிதினத்தின்மூலம்பெறப்படும் நிதிமூலம் உருவாக்கப்பட்ட இந்துபண்பாட்டுநிதியத்தின்மூலம் அறநெறி மாணவர்க்கும் சீருடைகளை வழங்கிவருகின்றோம்.

மதமாற்றம் தேவையா?

ஆலயங்கள் சமுகத்தை மையமாகவைத்துச் செயற்படுகின்றபோது மதமாற்றம் இடம்பெறவாய்ப்பில்லை. இன்று பலர் வறுமையை பயன்படுத்தி மதமாற்றம் செய்கிறார்கள்.

ஏனையமதங்களை நாம் இழிவுபடுத்தக்கூடாது. இந்துக்களின் வாழ்வியலை வளப்படுத்தவேண்டும். இந்துக்களின் அடையாளத்தை இருப்பை தக்கவைத்துக்கொள்ளவேண்டும். என்றார்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவான 267மாணவர்களுக்கான  வெற்றிக்கிண்ணங்கள் அதிதிகளால்  வழங்கப்பட்டன.

 

By admin