தமிழ் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்தே ஆட்சியமைப்போம் .தவறினால் எதிர்க்கட்சியாகவிருப்போம்!! – கல்முனையில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி!
-காரைதீவு நிருபர்-

நாம் எந்தவொரு சிங்களக்கட்சியுடனும் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கமாட்டோம். எனவே உள்ளுராட்சிசபைகளில் ஆட்சியமைக்க தமிழ்க்கட்சிகள் ஆதரவு தரவேண்டும்.தவறினால் எதிர்க்கட்சியிருப்போம்.

இவ்வாறு கல்முனையில் உரையாற்றிய தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சூளுரைத்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மற்றும்  கட்சி முக்கியஸ்தர்களைச் சந்திக்கும் விசேட கூட்டம் நேற்று(17) கல்முனை   ஜ.பி. வெஸ்ற் மண்டபத்தில் ரெலோ உபதலைவரும் கல்முனை மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளவருமான ஹென்றிமகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

அங்குரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கைவிட கிழக்கில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுத்தந்த மக்களுக்கும் அதற்காக உழைத்த ரெலோ வேட்பாளர்கள் கட்சித்தொண்டர்கள் அனைவருக்கும் முதலில் நன்றிகூறினார்.

ரெலோவின் அம்பாறை மாவட்டச்செயலாளர் ஆர்.டபிள்யு.கமலராஜன்(திருக்கோவில்) உபசெயலாளர் எஸ்.கனகராஜா ஆகியோரும் உரையாற்றினர்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெரும்பாலான சபைகளில் பெரும்பாலான ஆசனங்களைப்பெற்றிருந்தபோதிலும் தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலை வந்துள்ளது. இங்கு மட்டுமல்ல இலங்கையின் பலபாகங்களிலும் இந்தநிலைமைதான். அதற்கு இந்தப் புதிய கலப்புதேர்தல்முறைமையும் காரணமாகும்.

வடக்கு மாகாணத்தைவிட கிழக்கில் எமது ரெலோ கூடுதலான ஆசனங்களைப்பெற்றுள்ளது. அது மகிழ்ச்சி.அதற்காக உழைத்த உங்களனைவருக்கும் நன்றிகள்.வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

சங்கரி ஜயா மீள்பரிசீலனை செய்யவேண்டும்!

வடக்கு கிழக்கில் நாம் சபையை தமிழ்க்கட்சிகளோடு சேர்ந்துதான் ஆட்சியமைப்போம். இதில் த.தே.கூட்டமைப்புத்தலைமைகள் ஒருமித்தநிலைப்பாட்டிலுள்ளன. எனவே பேரவை ஈபிடிபி த.வி.கூ. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆட்சியமைக்க ஆதரவு தரவேண்டும்.

இதனிடையில் த.வி.கூட்டணி ஆனந்தசங்கரி ஜயா நேற்று விடுத்த செய்திக்குறிப்பில் நாம் த.தே.கூட்டமைப்பிற்கு ஆதரவு தரமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமை நம்மைப்பலவீனமாக்கும். அது சிங்களக்கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு துணைபோவதாகவரும்.

எனவே ஆனந்தசங்கரி ஜயா தமது முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.

அப்படி முரண்டுபிடித்து தமிழ்க்கட்சிகள் சேரமறுத்தால் சிங்களக்கட்சிகள் ஆட்சியமைப்பதைத்தவிர்க்கமுடியாது. அதற்காக நாம் சிங்களக்கட்சிகளுடன் ஒருபோதும் சேரமாட்டோம். அதைவிட நாம் எதிர்க்கட்சியிலிருந்துவிட்டுப்போவோம்.

 

த.தே.கூட்டமைப்பை பலவீனப்படுத்தமுடியாது!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கத்தில் தேசியத்தலைவரின் தலiமையில் ரெலோவுக்கும் கிழக்கிற்கும் பாரிய பங்குண்டு. எனவே அதனை அவ்வளவு எளிதாக பலவீனப்படுத்தமுடியாது.

கட்சிக்குள் முரண்பாடு வரும் போகும். அது சகஜம்.அதற்காக அதிலிருந்து வெளியேறுவது என்னைப்பொறுத்தவரை ஏற்கமுடியாது.

நாம் பேரவைக்குள் சென்றிருந்தால் இன்று த.தே.கூட்டமைப்பே இல்லை என்றநிலை உருவாகியிருக்கும்.நாம் தேசியத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது. த.தே.கூட்டமைப்பின் வளர்ச்சிக்கு நாம் பாடுபடவேண்டும்.

 

த.தே.கூ. தலைமைகள் மாறாது!

த.தே.கூட்டமைப்புத் தலைமைகள் சேர்ந்து தேர்தலுக்கு முன்னர் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். எந்தெந்தசபை எந்தெந்த கட்சிக்குரியதென்று தீர்மானித்துள்ளோம். அந்த தீர்மானத்திலிருந்து அது மாறாது. தீர்மானஙகளும் மாறாது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு திருக்கோவில் ஆகிய சபைகள் ரெலோவிற்குரியது. அங்கு தவிசாளர் யார் உப தவிசாயளர் யார் என்று முடிவெடுப்பது நாங்கள். அதில் வேறு யாரும் தலையிடமாட்டார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் யாரும் சந்தேகப்படவேண்டியதில்லை. எந்தப்பிரச்சினையும் வராது.

சம்பந்தர் ஜயா மாவைஅண்ணன் சித்தண்ணன் நானுட்பட அனைவரும் சேர்ந்து எடுத்த தீர்மானங்கள் மாறவேமாறாது.

 

மக்கள் சொன்னசெய்தி!

இந்தத்தேர்தலில் மக்கள் ஒரு செய்தியை த.தே.கூட்டமைப்பிற்கு சொல்லியுள்ளனர்.இதுவொரு எச்சரிக்கையும்கூட.

மக்களுக்குள் வாருங்கள். தேர்தலுக்கு மட்டும் வந்துவிட்டுப்போகாதீர்கள். எமது பிரச்சினைகளைத்தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை. வந்து பாருங்கள் கேளுங்கள் என்பதுதான் அந்தச்செயதி.

கடந்தகாலங்களில் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எம்.பியும்வரல்ல கூடவிருந்த தம்பியும்வரல்ல என்ற குறைபாடுஉள்ளது.

அத்தகைய தவறுகள் இன்னமும் தொடரக்கூடாது. மக்களுக்குள் இன்னமும் செல்லவில்லையென்றால் அடுத்தமுறை தூக்கிவீசுவார்கள்.

 

உறுப்பினர்கள் பிழைவிட்டால் மறுநாள் சீட்டுக்கிழியும்!

கட்சிக்கொள்கைகளுக்கு சபைக்கட்டுப்பாடுகளுக்கு  ஒழுக்கவிழுமியங்களுக்கு மாறாக நடக்கும் எந்தவொரு உறுப்பினர் என்றாலும்  மறுநாள் சீட்டுக்கிழியும். தமது ஆசன அங்கத்துவத்தை இழக்கவேண்டிவரும்.மற்றக்கட்சிக்கு மாறநினைத்தால் மறுநாள் ஆசனமில்லை.

சபையில் விவாதம் வரலாம் பேசலாம் . ஆனால் யாருடைய சேட்டுக்கொலரைப்பிடித்து இழுத்தார் என்றோ அடித்தார் என்றோ நிருபிக்கப்பட்டால் மறுநாளே அங்கத்துவத்தை இழப்பார்கள்.

பொதுவில் மதுபாவிப்பதையோ சிகரட் குடிப்பதையோ நிறுத்திக்கொள்ளுங்கள். தெரிந்தோ தெரியாமலோ பொதுவாழ்க்கைக்கு வந்துள்ளீர்கள். நீங்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும்.

இவர் ரெலோ உறுப்பினர் என்று பெயர்சொல்லும்படியாக நடக்கவேண்டும்.

சிலசபைகளில் ரகசியவாக்கெடுப்பு என்று சொன்னாலும் நீங்கள் அனைவரும் உங்களுக்குள் யாருக்குவாக்களிப்பது என்றுசொல்விட்டு காட்விட்டுத்தன் வாக்களிக்கவேண்டும். தவறினால் இழக்கவேண்டிவரும்.

உங்களை யாராவது எதிர்கட்சியினர் அல்லது சிங்களகட்சியினர் தலைவர் என்றோ உபதலைவர் என்றோ முன்மொழிந்தால் அதனை நீங்கள் ஏற்கக்கூடாது. மறுகணம் எழுந்து அதனை நான் ஏற்கவில்லை என்று கூறவேண்டும்.

சிலவேளை  ஆசைக்கு அடிபணிந்தால் அதுகனவாகிவிடும். ஆசனமும் இழக்கவேண்டிவரும். த.தே.கூட்டமைப்பின்;  செயலாளர் உடனடியாகச்செயற்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

ஆட்சியமைப்பதை தீர்மானிப்பவர்கள் தலைமைகள்!

எந்தச்சபையில் யாரோடு சேர்ந்து எப்படி ஆட்சியமைப்பது  பற்றித்தீர்மானிப்பவர்கள் தலைமைகள். எனவே நீங்களாக கற்பனைசெய்துகொண்டு யாரோடும் பேசிவிட்டு கூட்டிவராதீர்கள். அதனை நாம் பார்த்துக்கொள்வோம்.

பாராளுமன்றம் மாகாணசபையைவிட உள்ளுராட்சிபைக்கான அதிகாரங்கள் கூட. உறுப்பினர்கள் வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றலாம்.தேவைகளை இனங்கண்டு சேவைசெய்யவேண்டும்.

கட்சிக்கட்டுப்பாடு அவசியம். அதனைமீறக்கூடாது. அதேவேளை நாம் இணைந்திருக்கின்ற த.தே.கூட்டமைப்பின் நோக்கங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் விசுவாசமாகவிருக்கவேண்டும்.

 

மக்கள் எஜமானர்கள் நீங்கள் வேலைக்காரர்கள்!

பொதுவாழ்க்கை என்றுவந்துவிட்டால் ஏச்சுப்பேச்சு வரும். இலாபநஸ்ட்டங்கள் வரும். இனி நீங்கள் குடும்பத்தை மட்டும் கவனித்துவிட்டு வீட்டிலிருக்கமுடியாது.

நாம் தேர்தலில் வென்றுவிட்டோம். நாம்தான் இராஜாக்கள் என்று கொம்பு முறைத்தவர்களாக தலைக்கனம் படைத்தவர்களாக மாறிவிடக்கூடாது.நாம்மதான எஜமானர்கள் என்று நினைத்தால் மக்கள் தூக்கிவீசிவிடுவார்கள். இந்தத்தேர்தல் பெறுபேறும் நல்லஉதாரணம்.

மக்கள் எஜமானர்கள். நாம் அவர்களின் வேலைக்காரர்கள்.

எதிரிகளை புறக்கணிக்காதீர்கள். அவர்களும் உங்கள் வழிக்குவரக்கூடும். வட்டாரத்திற்குவட்டாரம் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு குழுவை அமைத்துச்செயற்படுங்கள்.

 

ஊடகங்களை பயன்படுத்துங்கள்!

கிழக்கில் மக்கள் பிரச்சினைகள் கூடுதலாக வெளிக்கொணர்பவர்கள் பத்திரிகையாளர்கள். எனவே ஊடகங்களை நீங்கள் மதிக்கவேண்டும். அவற்றைப்பயன்படுத்தவேண்டும்.

உங்கள் வட்டாரப்பிரச்னைகளை இனங்கண்டு அவர்களிடம் தெரியப்படுத்துங்கள். பத்திரிகையாளர் மாநாடுகளை சபை தொடங்கமுன்னரும் பின்னரும் நடாத்தலாம்.

வெற்றிபெற்றவர்களும் கட்சி பிரமுகர்களும் கருத்துரைத்தனர். சிலபிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர்.

 

By admin