மனைவிக்கு அஞ்சலி செலுத்த மூன்று மணி நேரம் மட்டும்; தந்தையோடு சிறைக்கு செல்ல முயற்சித்த மகள்; கிளிநொச்சியில் நடந்த உருக்கமான சம்பவம்!

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் உயிரிழந்த தனது மனைவி யோகராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த 3 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அவர் பொலிஸ் வாகனத்தில் மீண்டும் ஏற்றப்பட்டபோது அவரது இரு பிள்ளைகளும் தாமும் கூடவே வாகனத்தில் ஏறி தந்தையுடன் செல்ல முயற்சித்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்து சோகத்தில் ஆழ்த்தியது.

2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார். இவரின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்பதற்கு ஆனந்தசுதாகர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டபோதே சிறு பிள்ளைகளான மகனும் மகளும் அவருடன் கூட ஏறிச்செல்ல முற்பட்டனர்.

தற்போது தாயையும் இழந்து தந்தையையும் இழந்துள்ள இந்த குழந்தைகளை தமிழர் தாயகம் முழுவதும் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர்களிற்கு வேண்டிய கல்வி அவர்களிற்கு வேண்டிய உள ஆறுதல் மற்றும் ஏனைய தேவைகளை தாயகத்தில் உள்ளவர்களும் புலத்தில் உள்ளவர்களும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் வழங்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்துள்ளனர்.

இந்த குழைத்தைகளுக்காக அவர்களது தந்தையை விடுதலை செய்து பிள்ளைகளுடன் தந்தையை வாழ வைக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் கோரிக்கையாகும். இன்னும் எத்தனை எத்தனை குடும்பங்கள் உறவுகளை இழந்து தவித்துக்கொண்டு அந்த ஏக்கத்தில் ஆயுளை சுருக்கிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எப்போது விடிவு கிடைக்கும்…..

By admin