அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய அதிபர் நாகப்பன் இராசையா 30வருட கல்விச்சேவையிலிருந்து  ஓய்வு!

-காரைதீவு நிருபர் சகா-

30வருட கல்விச்சேவையிலிருந்து அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய அதிபர் நாகப்பன் இராசையா  சனிக்கிழமை (10) ஓய்வுபெற்றார்.

காரைதீவைச்சேர்ந்த திரு.இராசையா மேற்படி பாடசாலையில் 16வருடங்கள் அதிபராகவிருந்து அதன் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.

வெள்ளியன்று(9) அவரது 60வது பிறந்ததினத்தையும் ஓய்வுபெறுவதையும் முன்னிட்டு பாடசாலையில் புதியஅதிபர் எஸ்.ரகுநாதன் தலைமையில் உணர்வுபூர்வமான நன்றிகூர்வழியனுப்புவிழா நடைபெற்றது

விழாவில் மாணவர்கள் அனைவரும் காலில்வீழ்ந்து வணங்கி ஆளுயர பூமாலைசூட்டி கண்கலங்கிநின்றனர்.இது அனைவரதும் மனங்களை நெகிழச்செய்தது. ஆசிரியர்களும் கண்கலங்கினர்.

அங்கு 60வது பிறந்ததினத்தையொட்டி கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற அதிபருக்கான பிரியாவிடை நிகழ்வு பின்னர் விமரிசையாக நடைபெறுமென அதிபர் எஸ்.ரகுநாதன் தெரிவித்தார்.

இலங்கை அதிபர் சேவை தரம் 2ஜச் சேர்ந்த இவர் நாவிதன்வெளியைப்பிறப்பிடமாகக் கொண்டவர்.காரைதீவில் திருமணத்தால் இணைந்தவர்.

பேராதனைப்பல்கலைக்கழக கலைப்பட்டதாரியான இவர் சிறந்ததொரு ஆன்மீகவாதியாவார். அருகிலுள்ள மடத்தடி மீனாட்சிஅம்மனாலய அபிமானியாவார்.

அனைவரதும் நன்மதிப்பைப்பெற்று ஆடம்பரமற்ற அமைதியான வாழ்க்கைவாழ்ந்த இவர் கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை தனது 60வது வயதைப்பூர்த்திசெய்துள்ளார்.

நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம்   காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் நிந்தவூர்   அல்மஸ்ஹர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 14வருடங்கள் தமிழ்ப்பாட ஆசிரியராக பணியாற்றி இறுதியாக அட்டப்பள்ள விநாயகர் வித்தியாலயத்தில் 16வருடங்கள் அதிபராகக்கடமையாற்றிருந்தார்.

 

By admin