ஈராக் : சதாம் ஹுசெய்னின் ரத்வானியா அரண்மனை அமெரிக்கா பல்கலைக் கழகமாகின்றது..

ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசெய்னின் மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்த ரத்வானியா அரண்மனை அமெரிக்கா பல்கலைக் கழகமாக மாற போவதாக ஈராக் அரசுக்கு சொந்தமான ‘அல் சபா’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
ஈராக் நாட்டில் 1979-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை சதாம் ஹுசேன்அதிபராக இருந்தார் 2003-ம் ஆண்டு போருக்கு பின்னர் சதாம் ஹுசேனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதே ஆண்டின் டிசம்பர் 13-ந் தேதி திக்ரித் நகருக்கு அருகே பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் ஹுசேன் கைது செய்யப்பட்டார். அவர் மீது மனித உரிமை மீறல் வழக்குகள் தொடரப்பட்டன. அதன் முடிவில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு, டிசம்பர் 30-ந் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார். பாக்தாத் நகரில் அவர் வாழ்ந்த அரண்மனைகளில் முக்கியமானது ரத்வானியா அரண்மனை, இதில்தான் சதாம் ஹுசேன் பெரும்பாலும் தன் வாழ்நாளைக் கழித்ததாக கூறப்படுகிறது


இது தொடர்பாக அரசு சொத்துக்கள் துறையின் தலைவரான அகமது அரல் ருபாயி கூறுகையில், “பாக்தாத்தில் உள்ள ரத்வானியா அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகம் அமைப்பதற்கு, மந்திரிசபையால் உருவாக்கப்பட்ட கமிஷன் முடிவு செய்துள்ளது” என கூறினார்.

பாக்தாத்தில் அமெரிக்க பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈராக்கிற்கான அமெரிக்க தூதரிடம், அந்த நாட்டின் கல்வி மந்திரி அப்துல் ராசிக் ஈசா உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.