முன்னாள் உளவாளி மீது ரசாயன தாக்குதல் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 23 பேர் வெளியேற்றம் : இங்கிலாந்து பதிலடி……

முன்னாள் உளவாளி செர்கே ஸ்கிரிபல் மீது ரஷ்யா ‘நோவிசோக்’ ரசாயன விஷ தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 23 பேர் வெளியேற்ற இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. ரஷ்ய உளவாளியாக இருந்த செர்கே ஸ்கிரிபல் (66), இங்கிலாந்து உளவுப்பிரிவுக்கு முக்கிய தகவல்களை அனுப்பியதை ரஷ்யா கண்டுபிடித்தது. இதையடுத்து அவர் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில், செர்கேவை பார்ப்பதற்காக அவரது மகள் யுலியா இங்கிலாந்தின் சாலிஸ்பரி நகருக்கு சமீபத்தில் வந்தார். இருவரும் ஒரு வணிக வளாகத்தின் வெளியே கடந்த 4ம் தேதி அமர்ந்திருந்தபோது திடீரென  மர்ம பொருள் தாக்குதலுக்கு ஆளாயினர்.  இதில், அவர்கள் நிலை குலைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசாருக்கும் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒரு போலீஸ் அதிகாரி இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார். செர்கே, யுலியா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரசாயன விஷம் மூலம் செர்கே மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இங்கிலாந்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டதில், அவர்கள் மீது ‘நோவிசோக்-ஏ-230’ என்ற ரசாயன விஷம் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வகை ரசாயன விஷம் ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்தபோது கடந்த 1970 மற்றும் 1980ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டவை. இது வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் சகோதரர் கிம் ஜங் நம்மை கொல்ல பயன்படுத்தப்பட்ட வி.எக்ஸ் அல்லது சரின் ரசாயன விஷத்தை விட 5 முதல் 8 மடங்கு கொடியது. ஒருவரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கும், சர்வதேச ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பில் இருந்து தப்புவதற்கும் இந்த வகை ரசாயன விஷம் உருவாக்கப்பட்டது. நோவிசோக் விஷம் இங்கிலாந்தில் எப்படி பயன்படுத்தப்பட்டது என ரஷ்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்க ரஷ்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் 23 பேரை அறிவிக்கப்படாத உளவாளிகள் என இங்கிலாந்து அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் ஒரு வாரத்தில் இங்கிலாந்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார். ரஷ்யாவில் இந்தாண்டு நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள இங்கிலாந்து ராணி குடும்பத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர், அரச குடும்பத்தில் இருந்து யாரும் பிபா உலக கோப்பை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.