இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை மட்டக்களப்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது!

டினேஸ்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று (14) புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மும்மதத்தலைவர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், சிரேஸ்ட உபதலைவர் பொன் செல்வராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபைப் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், எம்.இராஜேஸ்வரன், மார்க்கண்டு நடராசா, எம்.கலையரசன் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள், போட்டியிட்ட வேட்பாளர்கள், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், காந்தி சேவா சங்க உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, தமிழ்மொழி வாழ்த்து, தலைமையுரை என்பன இடம்பெற்று பின்னர் பத்திரிகை அறிமுகவுரையினை கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் சிரேஸ்ட உபதலைவரினால் வருகை தந்த பிரமுகர்களுக்கு பத்திரிகை வழங்கி வைக்கப்பட்டது.

மதத்தலைவர்கள், இந்நாள், முன்னாள் பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், காந்தி சேவா சங்கப் பிரதிநிதிகள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், கட்சிக் கிளைத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கு இதன்போது பத்திரிகை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By admin