சிறுபிள்ளை விடுதி மூடப்படவில்லை:பெண்விடுதியுடன் இணைப்பு!
சிற்றூழியர் தட்டுப்பாடே காரணமென்கிறார் வைத்தியஅதிகாரி றிஸ்பின்.
காரைதீவு  நிருபர் சகா
 
 வைத்தியசாலையின்  சிறுபிள்ளை மருத்துவவிடுதி மூடப்படவில்லை மாறாக அந்த விடுதிக்குரிய சேவைகள் யாவும் பெண்கள் விடுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்குகாரணம்  சிற்றூழியர் தட்டுப்பாடே .

இவ்வாறு காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.எச்.றிஸ்பின் தெரிவித்தார்.

காரைதீவு வைத்தியசாலையில் சிறப்பாக இயங்கிவந்த சிறுபிள்ளை விடுதி மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததையடுத்து அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

அப்பிரிவில் பணியாற்றிவந்த இரு சிற்றூழியர்கள் இடமாற்றலாகிச்சென்றதும் அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் இரவில் சிற்றூழியர்கள் இல்லாதது குறித்து முறைப்பாடு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால் இவ்விடுதியை தற்காலிகமாக  2ஆம் வார்ட்டுடன் அதாவது பெண்கள் விடுதியுடன் இணைத்துள்ளோம். சிற்றூழியர் தட்டுப்பாடு தொடர்பில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியிடமும் மாகாணசுகாதாரப் பணிப்பாளரிடமும் தெரியப்படுத்தியுள்ளேன்.

ஏப்ரலில் சிற்றூழியர் இடமாற்றம் இடம்பெறும். அதில் எமக்கு சிற்றூழியர் கிடைக்கப்பெற்றதும் இதனை மீண்டும் தனியாக ஆரம்பிக்கலாம் என்றார்.

இந்த சிறுபிள்ளை விடுதிக்கு ஜனவரியில் 56பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. அதேபோல பெப்ருவரியில் 35பேர் சிகிச்சைபெற்றனர். இந்நிலையில் அப்பிரிவு மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் ஊருக்குள் கசியத்தொடங்கியதும் வைத்தியசாலைக்கெதிரான கருத்துக்கள் பரவலாக கிளம்பத்தொடங்கின.

இதன்போது எமது நிருபர் வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்தியஅதிகாரியைத் தொடர்புகொண்டு கேட்டபோதே இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது

 

By admin