இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey Feltman) நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினார்.

5 ஆவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

முக்கியமான தருணத்தில் அவர் இங்கு வந்திருப்பதை தமிழத் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது.

இந்நிலையில் சந்திப்புக் குறித்து பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,

அவர் ஜனாதிபதியை சந்தித்ததாக எம்மிடம் தெரிவித்தார். தற்போது இங்கு இடம்பெறும் ஸ்தீரமற்ற அரசியல் சூழ்நிலையை அவருக்கு எடுத்துரைத்துள்ளோம்.

இந்த கூட்டரசாங்கம் மக்கள் ஆணையின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எனவே அந்த ஆணையை அவர்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அவர்களது கடமை என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மக்கள் அவர்களுக்குக் கொடுத்த ஆணையை அவர்கள் உதாசீனம் செய்து கைவிடமுடியாதென்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளோம்.

அவரும் தான் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதை வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மிகவும் காலதாமதத்துடன் ஏற்பட்டதெனவும் தற்போது அந்த முன்னேற்றம் குறைந்துள்ளது என்பதையும் அவதானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் விசேடமாக உயர்ஸ்தானிகருடைய அறிக்கையில் இது பிரதிபலிக்கப்படுமெனத் தெரிவித்தார்.

சர்வதேசத்தினுடைய கவனம் வெகுவாக இலங்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த அரசாங்கம் எந்த மக்கள் ஆணையின் மூலம் ஆட்சியில் அமர்த்தப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையினதும் பொதுவாக சர்வதேச சமூகத்தனதும் எதிர்பார்ப்பு என்பதையும் தெரிவித்தார்.

இங்கு தான் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளைப்பற்றி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரோடு கலந்துரையாடுவதுடன் அதனை அவருக்கு எடுத்துரைப்பேன் என வாக்களித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையினுடைய விசேடமாக பொதுச் செயலாளருடைய ஆதரவு இலங்கையில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்குரிய முயற்சி வெற்றிபெறவேண்டும் எனபதில் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் 2015 இல் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் முற்றுமுழுதாக செயல் வடிவம் பெறவேண்டும் என்பதில் தம்முடைய ஆதரவு இருக்கும் என்பதையும் வலியுறுத்தினார் என அவர் மேலும் தெரிவித்தார்.

By admin