மல்வத்து பீடாதிபதி வண.திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரருக்கும், இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா. அருண்காந்த் இற்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கண்டி மல்வத்து பீடத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பு தொடர்பில் இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையகம், தெற்கு, மற்றும் கிழக்கில் அமைதியான சூழலை தமிழ் மக்கள் தற்போது எதிர்பார்க்கின்றனர். தற்போதைய அசாதாரண சூழலைப் பயன்படுத்தி சில குழுக்கள் மலையகத்திலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் மீது வன்முறைகளை ஏவி திசைதிருப்ப முயற்சிசெய்வதாக தகவல்கள் வந்தன.

நாம் உடனடியாக இராணுவ அதிகாரிகள் பொலிஸ்மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதி காரியாலய அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோரை தொடர்புகொண்டு அனைத்துவிதமான சமூக விரோத நடவடிக்கைகளையும் முறியடித்துள்ளோம்.

இது தொடர்பான விடயங்களே இன்றைய தினம் தேரருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த சந்திப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர் பதிலளித்து பேசும்போது,

இந்த நாட்டில் எல்லா இன மக்களும் அமைதியாக வாழ வேண்டும், ஒரு சிலர் செய்யும் தீய செயற்பாடுகள் நாட்டையே சீரழித்து வருகின்றன.

எனினும், கிழக்கில் தமிழ் மக்கள் பொறுப்புடன் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது, அவர்களுக்கு என் சார்பில் வாழ்த்துக்கள், இனி வரும் காலங்களிலும் இது தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழ்வின்

By admin