திருவெறும்பூர்: திருவெறும்பூரில்  பொலிஸ் அராஜகம் பொலிஸ்அதிகாரி எட்டி உதைத்ததில் . கர்ப்பிணி பெண் மரணம்……

திருவெறும்பூரில் தலைக்கவசம் போடாமல் சென்றவரின் மோட்டார் சைக்கிளை ஜீப்பில் விரட்டிச் சென்ற இன்ஸ்பெக்டர் ஜீப்பில் இருந்தபடியே பைக்கை காலால் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி கீழே விழுந்து கணவன் கண்முன் பரிதாபமாக இறந்தார். இதனைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா (40). இவர் வங்கிகளுக்கு கடன் வசூலித்து கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி உஷா (36). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்களாகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் உஷா தற்போது 3 மாத கர்ப்பமாக இருந்தார்.

துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர் அதனை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜீப்பை எடுத்துக்கொண்டு ராஜாவின் மோட்டார் சைக்கிளை பின்னால் விரட்டிச் சென்றார்.

திருச்சி-தஞ்சை சாலையில் பாய்லர் ஆலை ரவுண்டானா அருகே இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை மறித்து நிறுத்தினார். அப்போது ஜீப்பில் இருந்து கீழே இறங்கிவந்த அவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை ஆவேசமாக எட்டி உதைத்தார். இதனால் அவர் நிலைதடுமாறி மனைவி உஷாவுடன் சாலையில் விழுந்தார். இதில் 3 மாத கர்ப்பிணியான உஷா படுகாயம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் கலைந்து ரத்தம் வெளியேறி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த பாய்லர் ஆலை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடிவந்து படுகாயத்துடன் கிடந்த ராஜாவை தூக்கி சாலையோரம் படுக்கவைத்தனர். ஆம்புலன்சையும் வரவழைத்தனர். இதனால் பயந்துபோன போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் அங்கிருந்து ஜீப்பை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்து, நேற்று இரவு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைய மறுத்ததால், அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கர்ப்பிணிப்பெண் மரணத்துக்கு காரணமான துவாக்குடி போக்குவரத்து காவல் அதிகாரி காமராஜ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கத்தோடு விபத்தை ஏற்படுத்துதல், தனி மனிதருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் காமராஜ் அடைக்கப்பட்டார். வரும் 21 ஆம் தேதி வரை, அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

: