பப்புவா நியூ கினியா : பப்புவா நியூ கினியாவில் தொடரும் அவலம் .மீண்டும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு . 18 பேர் பலி…..

பப்புவா நியூ கினியாவின் தெற்கு ஹைலேண்ட்ஸ் மாகாணத்தில் கடந்த மாதம் 26–ந் தேதி, ரிக்டர் அளவுகோலில் 7.5 அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்கள் முற்றிலுமாக அழிந்தன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் 67 பேர் உயிர் இழந்தனர். அந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீளுவதற்குள் கடந்த 5–ந் தேதி பப்புவா நியூ கினியாவை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதிலும் பலர் உயிர் இழந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தெற்கு ஹைலேண்ட்ஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிர் இழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.