அம்பாறைக் கரையோரம் இயல்புநிலைக்கு திரும்பியது! கல்முனை சிங்கள மகாவித்தியாலயம் இயங்கவில்லை!
(காரைதீவு  நிருபர் சகா)
 
நேற்றுமுன்தினம் அமைதியற்றிருந்த அம்பாறை கரையோரப்பிரதேசம் நேற்று(7) வழமைக்குத் திரும்பியது.
பாடசாலைகள் அரச அலுவலகங்கள் சந்தைகள் என்பன வழமைபோல இயங்கின.
முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் என்று வதந்திகள் அடிப்பட்டபோதிலும் அனைத்து கடைகளும் பாடசாலைகளும் அலுவலகங்களும் திறந்திருந்தன. இருந்தபோதிலும் மாணவர்களின் வரவு வெகுவாகக்குறைந்திருந்தது.
கல்முனை நகரம் வழமைபோன்று இயல்புநிலையிலுள்ளது. கல்முனைநகரிலுள்ள உவெஸ்லி பற்றிமா போன்ற பெரிய பாடசாலைகள் வழமைபோன்றியங்கின.
தனியார் பஸ்கள் பெரும்பாலானவை இயங்கவில்லை. எனினும் அரச பஸ்கள் சேவையிலீடுபட்டன.கல்முனை அக்கரைப்பற்று வீதியில் பாலமுனை என்ற இடத்தில் காலையில் வீதிதடைபோட்டு சிறு பதட்டம் நிலவியபோதிலும் சற்றுநேரத்தில் இராணுவம் வரவழைக்கப்பட்டதும் நிலைமை சுமுகமாக மாறியது. போக்குவரத்தும் இடம்பெற்றது.
அம்பாறை நகரில் பணியாற்றும் சிறுபாண்மையின ஊழியர்கள் பெரும்பாலும் நேற்று பணிக்குச்செல்லவில்லையனெத் தெரிகிறது.
கல்முனை சிங்கள மகாவித்தியாலயம் இயங்கவில்லை!
கல்முனையிலுள்ள ஒரேயொரு சிங்கப்பாடசாலையான சிங்கள் மகா வித்தியாலயம் நேற்று புதன்கிழமை இயங்கவில்லை. மாணவரும் ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமுகமளிக்காதகாரணத்தினால் இயங்கவில்லை எனத் தெரியவருகிறது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலைக்குவந்த 6 சிங்களஆசிரியர்களும் கல்முனையின் பதட்டம் நிலவியதையடுத்து 9.30மணியளில் பாதுகாப்புக்கருதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.பிற்பகல் 3மணிவரை அவர்களால் வெளியேறமுடியாமலிரந்தது.
கல்முனையின் பதட்டநிலைமையே அதற்குக்காரணமாகும்.
பின்னர் அவர்களையும் கல்முனையில் பணியாற்றும் சில தனியார்வங்கி பெரும்பான்மையின உத்தியோகத்தர்களையும்  பிற்பகல் 3மணியளவில் பொலிசார் விசேடபாதுகாப்பு வழங்கி அம்பாறைக்குக்கொண்டு சென்று சேர்ப்பித்தனர்.

By admin