மயானப்பிரச்சினைக்கு  தீர்வு காண நிந்தவூர் பள்ளிவாசல் பெரியார்கள் முன்வரவேண்டும்.

(காரைதீவு நிருபர் சகா)

கடந்த காலங்களில் இனஉறவைக்கட்டிக்காத்துவந்த கிராமங்களுள் நிந்தவூர் கிராமமும் ஒன்றாகும். மயானப்பிரச்சினை முஸ்லிம்சகோதரர்களுடனான பிரச்சினை அல்ல என்றும் தனிநபர் பிரச்சினை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவம் இனஉறவை சீர்குலைக்கின்ற செயற்பாடாக உள்ளதென்று பலரதும் கருத்தும் நிலவுகின்றது. எனவே அங்குள்ள பெரிய பள்ளிவாசல்  மற்றும் ஊர்த்தலைவர்கள் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முனவரவேண்டும்.
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசா கோரிக்கைவிடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்:
அட்டப்பள்ளம் மயானப்பிரச்சினை ஒரு சமுகம் சார்ந்த பிரச்சினை .அந்த சமுகத்தின் அத்தியாவசிய தேவையான மயானம் சார்ந்த இருப்புடன் தொடர்புடையது.
அதனை ஒரு தனிநபர் ஆக்கிரமிக்கத் தலைப்படுவதும் அதற்கு இனவாதம்கருதி சில அதிகாரிகள் ஆதரவளிப்பதும் ஆரோக்கியமானதல்ல.
இன்று இப்பிரச்சினை இனரீதியாக நோக்கப்படுகின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.பொலிசாரும் அப்பாவி மக்களை ஏமாற்றியுள்ளனர்.
அந்த ஒரு தனிநபருக்காக நிந்தவூர் கிராமம் பாரம்பரியமாக கட்டிக்காத்தவந்த இனநல்லுறவு பண்பாட்டை சீரழிக்கமுயற்சிக்கலாமா என்ற வினாவும் எழுகின்றது.
நான்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன்அலியுடனும் இன்னும் சிலருடனும் கலந்துரையாடினேன். இருப்பினும் சாதகமான பலன் கிடைக்கவில்லை.
நீதிமன்ற செயற்பாட்டில் யாரும் தலையிடமுடியாது. அதனைப்பற்றிப்பேசவும் முடியாது.அது ஆர்ப்பாட்ட விவகாரம் தொடர்பானது. அது இன்றோ நாளையோ தீரும்.
அதுஒருபுறமிருக்க அடிப்படைப்பிரச்சினையான மயானப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நிந்தவூர் முன்வரவேண்டும்.
நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் மற்றும் ஊர்ப்பெரியார்கள் இது விடயத்தில் தலையிட்டு தீர்க்கமான முடிவைப்பெற்றுக்கொடுக்காமல் மௌனம் காப்பது வேதனையளிக்கிறது.
எனவே தாமதியாது உறவைக்கட்டிக்காக்க முன்வாருங்கள் .

By admin