சுழல் காற்றால் பாதிப்புக்குள்ளான பெரியநீலாவணை தொடர்மாடிவீடுகளை புனர்நிருமாணம் செய்ய நடவடிக்கை!
முன்னாள் எம்.பி.சந்திரகாந்தன் அமைச்சர் யாப்பா சந்திப்பில் இணக்கம்!
 (காரைதீவு  நிருபர் சகா)
 
அண்மையில் சூறாவளியினால் மிகமோசமாக பாதிப்புக்குள்ளான பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்தொகுதியை புனர்நிருமாணம்செய்ய நடவடிக்கைஎடுக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அனர்த்தமுகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவை சந்தித்துப்பேசியதன் பலனாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இச்சந்திப்பு நேற்று அனர்த்தமுகாமைத்துவ அமைச்சின் அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்றது. அவ்வமயம் அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதனும் உடனிருந்தார்.
பெரியநீலாவணை மக்கள் சூறாவளியினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர்.
அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி மீளக்குடியமர்த்தவேண்டும். அதுவும் பாதுகாப்பான இடத்தில்.
எனவே தொடர்மாடிவீட்டுத்தொகுதி புனரமைப்புச்செய்யப்படவேண்டும். அதன்கூரைகள் சூறாவளியினால் அள்ளுண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
எனவே அங்கு ஓடு அல்லாவிடில் உறுதியான கூரை போடப்படவேண்டும் என சந்திரகாந்தன் அமைச்சரைக்கேட்டுக்கொண்டார்.
இந்த அமைச்சு அதற்காகத்தான் இருக்கிறது. நீங்கள் எனது நீண்டகால நண்பர். உங்களது தந்தையார் சந்திரநேரு நல்ல சேவையாளன். எனவே முடியுமானவரை விரைவாக இந்த ஏற்பாட்டைச்செய்வேன். முடிந்தால் அப்பகுதிக்கு விஜயம்செய்வேன். என அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா பதிலளித்தார்.
புதுவருடப்பிறப்பிற்கு முன்னர் பெரியநீலாவணை மக்களை மீளக்குடியமர்த்தவேண்டுமென்பதே எனது அவா. அதற்கு விரைந்து ஆவன செய்யவேண்டும் என சந்திரகாந்தன் கேட்டதற்கு நிச்சயமாக என அமைச்சர் பதிலளித்தார்.

By admin