அம்பாறை திகன அட்டப்பள்ளம் அக்கரைப்பற்று சம்பவங்கள் அமைதிக்கு அச்சுறுத்தல்!
அமைதிகாக்குமாறு அம்பாறை சர்வமத சம்மேளனம் வலியுறுத்தல்!
(காரைதீவு  நிருபர் சகா)
அம்பாறை திகன அட்டப்பள்ளம் அக்கரைப்பற்று  சம்பவங்கள் இனநல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலான சம்பவங்களாகும். இவை திட்டமிட்டுச்செய்யப்பட்ட சம்பவங்களாகும். இவை தொடர அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அம்பாறை மாவட்ட சர்வமத சம்மேளனம் அரசாங்கத்தையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜமீல் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் இணைந்து இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுவதாவது:
நாட்டில் அமைதி திரும்பி 3ஆண்டுகளுக்குள் மீண்டும் இனவாத தாக்குதல்கள் ஆரம்பித்திருப்பது முழு இலங்கைக்கும் முழு மானிடத்திற்கும் பாதிப்பையேற்படுத்தும்.
எந்த இனமாகவிருந்தாலும் வன்முறையை ஆதரிக்க யாரும் தயாராக இல்லை. ஒரு சிறுகுழுவினர் அல்லது ஒரு தனிநபரின் செயற்பாடு காரணமாக ஒட்டுமொத்தசமுகமும் நிம்மதியின்றி சந்தேகத்தோடு வாழும்நிலைக்கு இட்டுச்செல்லக்கூடாது.

இலங்கையில்  கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கும் இன வன்முறை வெறியாட்டங்கள் வன்மையான கண்டனத்துக்குரியவை பிரச்சினைகளின் மூலத்தை கண்டு அதனை களைந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது இன்றய நிலையில் அவசரமானதும் அவசியமானதுமாகும் .

வன்முறை யார் செய்திருந்தாலும் அது கண்டிக்க தக்கது இலங்கையில் நடை பெறும் சம்பவங்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன.

அரசாங்கத்தால் மாத்திரம் இத்தகைய செயற்பாட்டை கட்டுப்படுத்தமுடியாது. மாறாக சமுகத்தில் இனங்களிடையே நல்லிணக்கம் இனஉறவு சமாதானம்சௌயன்யம் நிலவ அரசியல் சமுகத்தலைவர்களை விட சமயத்தலைவர்கள்; கூடுதல் அக்கறை காட்டவேண்டும்.
தாக்குதலின் வெற்றி என்பது தற்காலிகமானதே அதுவும் ஒரு சிலருக்கு. ஆனால் அதனை மீளக்கட்டியெழுப்ப பலவருடங்கள் செல்லும். இனங்கள் சமுகங்கள் ஒருபோதும் நிரந்தரமாக பிரிந்துவாழமுடியாது. அதுசாத்தியமுமில்லை.
எந்த பிரச்சினையானாலும் பேசித்தீர்ப்பதே இறுதியானதும் நிலைத்துநிற்கக்கூடியதாகும். எனவே இந்தக்கட்டத்திலாவது இவ்வாறான தாக்குதல்களை நிறுத்தி அமைதி காக்குமாறு சகல தரப்புகளையும் வேண்டுகின்றோம்.

By admin