தெல்தெனிய திகன நிகழ்வுகளின் பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி முஸ்லிம் இளைஞர்களின் பொறுப்பற்ற நடத்தைகளே சிங்கள இளைஞனின் மரணத்திற்கு காரணம் என்றும் ஊகிக்க முடிகின்றது.

இந்தச்  சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சில தகவல்கள் பின்வருமாறு, மரணமடைந்த அந்த சிங்கள இளைஞன் ஒரு லொரி சாரதி. சம்பவ தினம் நள்ளிரவு வேளை அம்பாறை நோக்கி செல்வதற்கு லொரியை எடுத்த போது, பின்னால் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பக்கக் கண்ணாடியில் சிறிது மோதி அது சேதமடைந்துள்ளது.

இந்த நேரம் குடிபோதையில் முச்சக்கரவண்டியில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் கண்ணாடியை உடனடியாக வாங்கித் தருமாறு லொறி சாரதியான இளைஞனிடம் அடம்பிடித்துள்ளனர்.

“இந்த நள்ளிரவில் எங்கும் வாங்க முடியாது. நான் இப்போது அம்பாறை செல்ல வேண்டியிருக்கிறது. எனவே இப்பணத்தை வைத்து நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்” என 1000 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு அவ்விளைஞன் அவ்விடத்திலிருந்து லொரியுடன் நகர்ந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(பக்கக் கண்ணாடி ஒன்றின் விலை 160 ரூபா என தகவல்)

பின்னர் இவர்கள் லொரியை பின்தொடர்ந்து சென்று பெற்றோல் நிரப்பும் நிலையமொன்றில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் குறித்த சாரதியான இளைஞனை தாக்கியதாகவும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்தின் பின் நேற்று முன்தினம் (3) அவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சிங்கள இளைஞர் முஸ்லிம்களுடன் நெருக்கமாக பழகக் கூடியவர் என்றும், உதவி ஒத்தாசைகள் புரியக்கூடியவர் என்றும் தௌபீக் ஜமாத் சகோதரர்களை பஸ் போக்குவரத்து இல்லாத சந்தர்ப்பங்களில் தனது லொரி மூலம் ஏற்றிச்சென்ற தருணங்களும் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நெஞ்சை நெகிழ வைக்கும் 
சிங்கள இளைஞனின் குடும்ப பின்னணி

கால் ஊனமுற்ற தந்தை. கடுமையான நோயினால் படுக்கையில் கிடக்கும் தாய். ஒரு மாதத்திற்கு முன் மரணித்த தனது குழந்தையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத மனைவி. மூளை வளர்ச்சி குன்றிய தங்கை. இது தான் அந்த இளைஞனின் குடும்பம். அவர்களை பராமரிக்கவே இரவு பகலாக உழைத்தார் அந்த இளைஞன்.

பிந்தி கிடைத்த தகவலின் படி, பிரதேச உலமா சபை மற்றும் ஊரார் ஒன்றிணைந்து சுமார் 3 இலட்சம் ரூபா‌ய்கள் சேகரித்து உடனடியாக அக்குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளனர். இன்னும் பத்து இலட்சம் சேகரித்து தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடி தலைமறைவாக இருந்த ஒரு இளைஞனை ஊரார்களே சுற்றி வளைத்து சரணடையச் செய்துள்ளனர்.

இறுதிச் சடங்குகள் தற்போது இடம்பெறுகின்றன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை எம்மிடம் ஒப்படைக்குமாறும் சிலர் ஆர்ப்பாட்டம் செய்வதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி- தமிழ் நியுஸ்-

By admin