கண்டி திகன பகுதியில் இன்று இடம்பெற்ற பதற்ற நிலையின் காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் தற்போது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் தமக்கு உரிய நீதி வேண்டும் என்றும், இனவாதிகள் எங்களுக்கு வேண்டாம் எனவும் கோரி பல்வேறு கோசங்கள் எழுப்பிய வண்ணம் இவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அத்துடன், கண்டி வன்முறைச் சம்பவம் தொடர்பிலும், கள நிலவரங்கள் தொடர்பிலும் பல்வேறு கானொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தியில் சாரதி ஒருவரை , முச்சக்கரவண்டியில் வந்த சிலர்  தாக்கினர். அதன்போது, தாக்குதலுக்கு உள்ளானவர் பலியானார்.

தாக்குதல் சம்பவத்தில் பலியானவரின் ஆதரவாளர்கள், தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கு நேற்று தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை தொடர்ந்துள்ளது. இதில் மற்றுமொரு வர்த்தக நிறுவனத்திற்கு நேற்றிரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 24 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை விடுவிக்கக்கோரி மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று  காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தினைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சர்கள் கண்டி பிரதேசத்திற்கு விரைந்து சூழ்நிலை தெடார்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

அத்துடன், கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாறான தாக்குதல் செயற்பாடுகள் இன ரீதியாக தோற்றுவிக்கப்படுகின்றதென்றும், இதற்கு சம்மந்தப்பட்ட அனைவரும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளதுடன் தமக்கான தீர்வினை உடன் பெற்றுத்தருமாறும் பல்வேறுத் தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

By admin