இலங்கையில் நடைபெற உள்ள முத்தரப்பு டி 20 தொடரில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விலகல்…..

இலங்கையில் நடைபெற உள்ள முத்தரப்பு டி 20 தொடரில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விலகி உள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு டி 20 தொடர் வரும் 6-ம் தேதி கொழும்பு நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் விலகி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் அவர், உள்நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்ற போது காயம் அடைந்தார். விரலில் ஏற்பட்ட காயம் குணமடையததால் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், டி 20 தொடரிலும் ஷாகிப் அல் ஹசன் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற உள்ள முத்தரப்பு டி 20 தொடருக்கான அணியில் ஷாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டிருந்தார். எப்படியும் அவர், உடல் தகுதியை பெற்றுவிடுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் நம்பியிருந்தது. இதற்கிடையே கடந்த வாரம் ஷாகிப் அல்ஹசன், மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக தாய்லாந்து சென்றார். அங்குள்ள மருத்துவர்கள், விரலின் உள்பகுதியில் காயத்தின் தன்மை முழுமையாக குணமாகவில்லை, இதனால் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளனர். இதனால் ஷாகிப் அல் ஹசன் முத்தரப்பு டி 20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

வங்கதேச அணியின் இடைக்கால பயிற்சியாளரான வால்ஷ் கூறும்போது, “ ஷாகிப் அல் ஹசன் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவதற்கு நாங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளோம்” என்றார்.

ஷாகிப் அல் ஹசன் விளையாடாத நிலையில் வங்கதேச அணியை துணை கேப்டனான முகமதுல்லா ரியாத் வழிநடத்த உள்ளார். ஷாகிப் அல் ஹசனுக்கு பதிலாக லிட்டன் தாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.