அட்டப்பள்ளம் விடயத்தில் தமிழ் தரப்பினர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டு செயற்பட வேண்டும்!

அம்பாறை மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ் கிராமங்களில் ஒன்றான அட்டப்பள்ளத்தில் உள்ள மயானத்தை முஸ்லிம்கள் கபளீகரம் செய்து கையகப்படுத்தி இருப்பது தொடர்பான விடயங்களை கையாள்வதில் அரசியலுக்கு அப்பால் தமிழ் தரப்பினர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

அட்டப்பள்ளம் மயானம் முஸ்லிம்களால் கபளீகரம் செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக அட்டப்பள்ளம் மாரியம்மன் கோவிலில் மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதில் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என். விஷ்ணுகாந்தன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி,தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெயசிறில் , காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடராஜா ஜீவராசா ஆகியோர் அடங்கலாக அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

இங்கு இராஜேஸ்வரன் தொடர்ந்து பேசுகையில் அட்டப்பள்ளம் மயானம் முஸ்லிம்களால் கபளீகரம் செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்டு இருக்கின்ற சம்பவத்தில் பொலிஸார் அடங்கலாக அரசாங்க அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயற்படுகின்றமை வெளிப்படையாக தெரிகின்றது,

அட்டப்பள்ளம் மயானத்தை மீட்பதற்கும், இவ்விடயத்தோடு சம்பந்தப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களின் விடுதலைக்கும் தமிழர்கள் என்கிற வகையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் தமிழ் தரப்பினர் அனைவரும் செயற்பட வேண்டி உள்ளது, அரசியலுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட்டு இக்கிராம மக்களுக்கு நியாயத்தை பெற்று கொடுக்க வேண்டும் என்றார்.

By admin