இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருட்களை விநியோகம் செய்வதற்கு இந்தியா நிபந்தனை விதித்துள்ளது.

கடன் அடிப்படையில் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகம் செய்ய வேண்டுமாயின் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிணையொன்றை கோருவதற்கு இந்திய எக்ஸிம் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. இந்த கடன் அடிப்படையில் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் இறுதி எரிபொருள் கப்பல் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

ஓர் பிணை அடிப்படையிலேனும் கடன் பெற்றுக் கொள்ள கவனம்

மேலும், 500 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் வங்குரோத்து நிலைமையினால் ஏதேனும் ஓர் பிணை அடிப்படையிலேனும் கடன் பெற்றுக் கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளக் கூட்டுத்தாபன அதிகாரி தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு 500 மில்லியன் டொலர் கடன் கிடைக்கப் பெற்றால் மொத்தமாக இந்தியாவிடமிருந்து எரிபொருளுக்காக 1200 மில்லியன் டொலர் கடன் கிடைக்கப் பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.