யாரைச்சொல்லி நோவது – சஜன் செல்லையா

நேற்றைய தினம் (15/06/2022) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரதுறை சார் ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் சென்றதாகவும் அங்கு பல மணிநேரமாக காத்திருந்த மக்களின் எதிர்ப்பு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் ஒரு காணொளி காணக்கிடைத்தது.

அத்துடன் தாம் அத்தியாவசிய சேவையாளர்கள் எனவும் தொடர்ச்சியாக பல மணிநேரம் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு தமது கடமைக்கு சமூகமளிப்பது சிரமம் எனவும் இதை பொதுமக்கள் உணர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், அதிகாரிகளும் பாதுகாப்பு பிரிவினரும் வழிமுறைகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், இல்லையெனில் எதிர்வரும் நாட்களில் சுகாதாரத்துறையினர் கடமைகளுக்கு செல்லமுடியாமல் போனால் பிணிச்சாவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை தொனி கலந்த தமது நிலைப்பாட்டை மிகத்தெளிவாக கூறியிருந்தார்.

அந்த சுகாதார உத்தியோகத்தரின் அனைத்து விடயங்களும் ஏற்புடையவையே, மாற்றுக்கருத்துக்கிடமில்லை. மறுக்கவும் முடியாத ஜதார்த்த விடயங்களே.

ஆனாலும், தற்போதைய நாட்டு சூழ்நிலை யாவரும் அறிந்ததே, அனைத்து மக்களும் பல இடர்பாடுகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர் அதிலும் முகமுக்கியமாக எரிபொருள் மற்றும் Gas ஐ பெற்றுக்கொள்ள நினைத்துப்பார்க்க முடியாத அளவு வரிசைகளில் பல மணிநேரம் காத்திருந்து குறிப்பிட்ட அளவு எரிபொருள் மற்றும் Gas ஐ பெற்றுக்கொள்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது அவர்கள் உடல், உள ரீதியாக சோர்வடைந்திருக்கும் போது அந்த இடத்திற்கு ஜனாதிபதியே எரிபொருள் நிரப்பவந்தாலும் எதிர்ப்பை காட்டுவார்கள் அது சாதாரண மனிதனின் அடிப்படை உளவியல் சார் கோபமே. அதை யாருமே மாற்ற முடியாது.

யாராகினும் அப்பாவிப்பொதுமக்களை கடிந்துகொள்வதில் எந்தபயனும் இல்லை என்பதே எனது கருத்து.

பொறுப்புமிக்க அரச அதிகாரிகள் அத்தியாவசிய சேவையாளர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள மாற்றுவழியை மேற்கொள்ள வேண்டும். அது கால்கடுக்க பலமணிநேரம் வரிசையில் காத்திருக்கும் சாதாரண பொதுமகனை பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

அல்லது அத்தியாவசிய சேவையாளர்களுக்காக மட்டும் போக்குவரத்து சபையின் அனுமதியுடன் சரியான நேரத்துக்கு பொதுப்போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்தவேண்டும்.

அல்லது அத்தியாவசிய சேவையாளர்களுக்காக மட்டும் என அடையாளப்படுத்தி ஒரு குறித்த எரிபொருள் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எரிபொருளை விநியோகிக்க வேண்டும். (குறித்த நேரம் என்று இல்லாமல் முழுமையான நாளை ஒதுக்க வேண்டும்)

இதை விட மாற்றுவழிகளை வழங்க முடியுமானவர்கள் குறைந்தது நம்மூரிலாவது பொறுப்பு மிக்க அதிகாரிகளுக்கு வழங்கி அனைவருக்கும் ஏற்றாற்போல் ஆவண செய்யுமாறு மிகத்தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.