அட்டப்பள்ள விவகாரம் தமிழ்மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!
தமிழ்த்தலைமைகளிடம் கூறுவோம்:சட்டத்தை நாடுவோம்!
அட்டப்பள்ள மக்களிடம் ரெலோ உபமுதல்வர் ஹென்றி!
(காரைதீவு  நிருபர் சகா)
 

அட்டப்பள்ள விவகாரம் சாதாரணமாகப் பார்க்கக்கூடியவிடயமல்ல.இது ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கு அடிக்கப்பட்ட சாவமணி. ஓர் எச்சரிக்கை. இதனை நாம் சும்மா விடப்போவதில்லை.

இவ்வாறு நேற்று அட்டப்பள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல்கூறிய ரெலோ கட்சியின் உபமுதல்வரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் இம்முறை கல்முனைமாநகரசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரதிநிதியுமான  ஹென்றிமகேந்திரன் தெரிவித்தார்.

அட்டப்பள்ள் தமிழ்மக்கள் 23பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதையறிந்து ஹென்றி மகேந்திரனும் அவருடன் கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைரும் தமிழரசுக்கட்சியின் 60வருடகால மூத்தஉறுப்பினருமாக கு.ஏகாம்பரம் கல்முனை மாநகரசபைக்குத் தெரிவான பிரதிநிதி சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் சென்றிருந்தனர்.

முன்னதாக அவர்கள் மயானத்திற்குச்சென்று அங்கு கட்டப்பட்டிருந்த கல்லறைகள் உள்ளிட்ட பல விடயங்களைப்பார்வையிட்டனர்.

பின்னர் மக்களைச்சந்தித்தனர். குறிப்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மக்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல்கூறினர்.

அங்கு மேலும் அவர்கூறுகையில்:

இது இனரீதியான பிரச்சினை அல்ல. பேராசை கொண்ட ஒரு தனிநபரின் பிரச்சினை. அவருக்கெதிராக அட்டபள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்தே ஜனநாயக ரீதியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் இதனை இனரீதியாக சித்தரித்து செல்வாக்கால் சட்டத்தையும் வளைத்துப்போட்டிருக்கிறார். பாவம் அப்பாவி மக்கள்.

இதுவிடயம் தொடர்பாக நாம் எமது தமிழ்த்தலைமைகளிடம் உரியவிபரங்களுடன் முறையிடுவோம்.

மேலும் விரைந்து செயற்படுவதற்காக சட்டஉதவியை நாடவுள்ளோம். திங்கள் முன்னநகர்வு (மோசன்) போட்டு பிணையில் எடுக்க சட்டத்தை நாடுவோம். என்றார்.

பிரதிநிதி கு.ஏகாம்பரம் கூறுகையில்:

தமிழ்மக்கள் பல வேதனைகளையும் சோதனைகளையும் கடந்துவந்தவர்கள். வலிகளை நன்கு அறிவார்கள்.

தமிழர் நில அபகரிப்பென்பது இன்றுநேற்றல்ல காலாகாலா காலமாக நடந்துவருகின்றது. நீதி சகலருக்கும் ஒன்றாக இருக்கவேண்டும். இது முஸ்லிம் சகோதரர்களுடனான பிரச்சினை அல்ல .ஒரு நிலஆசைகொண்ட தனி நபருடைய பிரச்சினை.

200வருடகாலமாக சடலம் புதைத்துவந்த பகுதியை ஆக்கிரமிப்பதென்பது அனுமதிக்கமுடியாது. என்றார்.

பிரதிநிதி ராஜன்கூறுகையில்:

இங்குள்ள தமிழர்கள் அநாதைகள் அல்ல.நீங்கள் வாக்களித்தவர்கள் வராவிட்டாலும் நாம் வருவோம். உங்களுக்கான சட்டஉதவிக்கு தேவையான உதவியைச்செய்வோம். நீங்கள் கலங்கவேண்டாம்.

நாம் அறிக்கைவிட்டுவிட்டு சும்மாயிருக்கமாட்டோம். தேவையான உதவிகளைச்செய்யகாத்திருக்கின்றோம். அதற்காகவே புறப்பட்டிருக்கின்றோம். என்றார்.

 

 

By admin