ஐரோப்பா :ஐரோப்பா பனிப்புயலுக்கு இதுவரை 55 பேர் பலி.இயல்பு நிலை பாதிப்பு 

ஐரோப்பாவில் நிலவி வரும் பனிப்பொழிவு  மற்றும் பனிப்புயலின் தாக்கத்தினால் 55-க்கும் மேற்பட்டோர் பலியாகி  உள்ளனர். விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.  பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள்  மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளும்  பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை இந்த  வழக்கத்திற்கு மாறான குளிர் உணரப்பட்டது.

கடும் குளிரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.  போலந்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவேகியாவில் 7 பேர்  இறந்துள்ளனர். ஏழைகள், வீடற்றவர்கள், மற்றும் குடியேறிகள் இந்த மிகப்பெரிய  பனிப்புயலால் பாதிக்கப்படுவார்கள் எனவும், முதியவர்கள், குழந்தைகள், நீண்ட  காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும்  மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர்பான உபாதைகளுக்கு உள்ளாகும் ஆபத்து  அதிகமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

பனிப்புயல் காரணமாக அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் அனைத்து  விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான  நிலையத்திலும் பல்வேறு விமானங்கள் இயக்கப்படவில்லை.
ஒருபுறம் பனிப்பொழிவினால் பொதுவாழ்க்கை முடங்கியிருந்தாலும், சில  பகுதிகளில் பொதுமக்கள் பனிச்சூழலை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர். சில  பகுதிகளில் ஐஸ் ஸ்கேட்டிங் சக்கரங்களை அணிந்து கொண்டு ஸ்கேட்டிங்  செய்வதையும் காண முடிகிறது. ஆனால், தண்ணீர் சரியாக உறையாத பகுதிகளில்  இவ்வாறு ஸ்கேட்டிங் செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம் என  எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக்கலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பனிப்புயல் கடந்து செல்லும்  வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு அயர்லாந்து பிரதமர் கேட்டுக்  கொண்டுள்ளார்.