இந்திய-அமெரிக்க விஞ்ஞானி நவீனுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் . 7.75 கோடி, புற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் சாதனை…….

அமெரிக்காவில் புற்று நோய் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய அமெரிக்கரான நவீனுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரசாயனம் மற்றும் மூலக்கூறு பொறியியல் துறை இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் நவீன் வரதராஜன். இவர் சக பேராசிரியர் சாங்யூக் சூங்குடன் இணைந்து புற்று நோய் குறித்த ஆராய்ச்சி செய்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும் டிசெல் என்ற உயிரணுக்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். இதன் மூலம் புற்று நோய் கட்டிகளை அழிக்க முடியும் என அவர் கண்டறிந்தள்ளார். அதுபோலவே போராசிரியர் சாங்யூக், கர்ப்பப்பை, வாய் புற்று நோய் தடுப்பது குறித்த ஆராயச்சிகளை மேற்கொண்டுள்ளர். இவர்களுக்கு டெக்சாஸை சேர்ந்த புற்று நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் பல கோடி ரூபாய் நிதி வழங்கி கவுரவித்துள்ளது.

நவீன் வரதராஜனுக்கு 7 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. அதுபோலவே சாங்க்யூவிற்கு, 5 கோடி 35 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வரதராஜன் கூறுகையில் ‘‘புற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் டிசெல்கள் மிக முக்கியமானவை. செல்களின் கூட்டிணைவை சரியான முறையில் பயன்படுத்தினால் புற்று நோயை எதிர்த்து போராட முடியும். புற்று நோய் குறித்த எனது ஆராய்ச்சிக்கு இந்த நிதி பயன் தரும்’’ எனக் கூறினார்.