தமிழர்களின் மயானத்தைக்கூட காப்பாற்ற முடியாத அரசியல்வாதிகள்?
அட்டப்பள்ளம் ஆலய தலைவர் கோபாலன் ஆதங்கம்!
காரைதீவு  நிருபர் சகா
 
பண்டுதொட்டு எமது அட்டப்பளம் மக்களின் பிரேதங்களை அடக்கிவரும்; இந்து மயானத்தைக்கூட காப்பாற்றமுடியாத கையறுநிலையில் எமது அரசியல்வாதிகள் உள்ளனர். நினைக்கவே வேதனையாக உள்ளது.
இவ்வாறு அட்டப்பள்ளம் ஆலயத்தலைவர் த.கோபாலன் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
அட்டப்பள இந்தவிவகாரம் தொடர்பாக இன்று (2) சமரச மாநாடு ஒன்று நடைபெறவிருக்கிறதே என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
அட்டப்பள தமிழ்மக்கள் எப்போதும் நிந்தவூர் முஸ்லிம்மக்களோடு மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்துவந்தவர்கள்.
இந்த மயான ஆக்கிரமிப்பு என்பது ஒரு தனிநபருடைய பிரச்சினை. உண்மையில் காலாகாலமாக 14ஏக்கர் காணி மயானமாகவிருந்துவந்தது.
அதில் கடந்த வருடம் இதே பேராசிரியர் வந்து 12ஏக்கர் தனக்கிருப்பதாக ஒரு போலி உறுதியைக்காட்டி அளந்தார். எமக்கு வேறுவழயிருக்கவில்லை. மயானத்திற்கு 2ஏக்கர் போதுமென்று நினைப்பில் இருந்தோம்.
ஆனால் நேற்றுமுன்தினம் மீண்டும் அவர் வந்து அந்த 2 ஏக்கரையும் சேர்த்து அளக்கமுற்பட்டார். நீதிமன்ற ஆணை இருப்பதாகக்கூறியபோதிலும் கிராமசேவையாளரோ உரிமையாளரோ நீதிமன்ற ஆணையைக்காட்டவில்லை.
இந்த சட்டவிரோத செயற்பாட்டை நாம் மட்டுமல்ல அட்டபளத்திலிருக்கும் முஸ்லிம் சகோதரர்களும்சேர்ந்தே எதிர்த்தோம்.
அங்கு வந்த உதவிபிரதேசசெயலாளரை நானும் யாரிஸ் என்ற பிரதேசசபை உறுப்பினரும் இணைந்தே காப்பாற்றி ஜீப்பில் ஏற்றினோம்.
அங்கிருந்த முஸ்லிம் சகோரதர்கள் பலர் சொன்னார்கள். ஏற்கனவே முஸ்லிம் மையவாடியொன்றுக்கு அட்டப்பள்ள ஆலய குருக்கள் மணிமந்திரசர்மாதான் வாக்குமூலம்கொடுத்து எமக்கு மையவாடியை பெற்றுத்தந்தார். எனவே இது தமிழர்களுடைய மயானம். இதில் தனிநபர் ஆக்கிரமிக்க அனுமதிக்கமுடியாது என்றனர்.
இந்தநிலையில் எமது போராட்டம் இருஇனங்களும் சேர்ந்தே மேற்கொள்ளப்பட்டது. நாம் இணைந்தேயிருக்கிறோம்.
எனினும் எமது தமிழ் அரசியல்வாதிகள் எதற்கெல்லாமோ அறிக்கை சுடச்சுட விடுகிறார்கள். வாக்களித்த நாம் சாவா வாழ்வா என்றுபோராடுகின்றோம். ஏறெடுத்தும் பார்க்கிறார்களில்லை.
வாக்குக்கேட்டு மட்டும் வருவார்கள். பின்னர் இந்தப்பக்கமே பார்க்கிறார்களில்லை. எமது எம்பிக்குக்கூட போன் எடுத்தால் எடுக்கிறாரில்லை. இதற்குத்தானா இவர்களை தெரிந்தது?
ஆக காரைதீவு சிறில் அண்ணனும் கல்முனை இராஜேஸ்வரன் ஜயாவும்தான் அரசியல்வாதிகள் என்று வந்தார்கள். இதுதான் எமது தமிழ் அரசியல்வாதிகளின் நிலை? என்றார்.

By admin