புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பொறுப்பேற்க உள்ள அமைச்சுக்களும் 20 அமைச்சுகளில் அடங்கும் எனக் கூறப்படுகிறது. புதிய அமைச்சரவை அடுத்த வாரத்திற்கு முன்னர் பதவியேற்கும் என தெரியவருகிறது.

மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று மாலை நியமித்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைகளை நாடாமளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் நிராகரித்தன.

இந்த நிலையில் பொதுஜன பெரமுவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உடனடியாக அமைச்சரவையை நியமித்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னரே சர்வதேச நாணய நிதியம் உட்பட உதவி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.