இணைந்திருக்கும் காலிமுகத்திடலும் பிரிந்து நிற்கும் கல்முனையும்!

அரவி வேதநாயகம்

** குடும்ப அரசியலை துடைத்தெறிய போராடும் இளைஞர்,யுவதிகள்

** இன வாதத்தால் ஆட்சிபீடம் எறிய ஜனாதிபதி தடுமாறுகிறார்

** தமிழ் அரச அதிகாரிக்கு எதிரான கல்முனை மேயரின் அநாகரிக செயல் ; கண்டிக்க யாருமில்லை

எமது நாடு நாளுக்கு நாள் வரலாற்றில் இல்லாதவாறு பல திருப்பங்களை கண்டுவருகின்றது. அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் கமராக் கண்களும் இலங்கை மீதே இருந்துவருகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இன, மத, மொழி பேதமற்ற போராட்ட களமாக இன்று காலிமுகத்திடல் மாற்றமடைந்திருக்கின்றது. நாட்டின் குடிமக்கள் அவர்களது விடிவிற்காக அகிம்சை வழியில் எவ்வாறு போராடுவார்களோ அதற்கொப்பாக காலிமுகத்திடல் போராட்டம் விரிவடைந்து செல்கிறது.

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி ஒன்றுபட்ட இலங்கையராய், ஒரு பலம்வாய்ந்திருந்த சிங்கள பெரும்பான்மை அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த வரலாறு இதுவாகத்தான் இருக்கமுடியும்.

தனியான இனவாதப் பிரச்சாரங்களால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிராக உசுப்பேற்றப்பட்டு ஏறத்தாள 7 மில்லியன் வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய தனது சாம்ராஜ்யத்தை தக்கவைக்க முடியாமல் திண்டாடுகிறார்.

காலிமுகத்திடல் மக்களை ஒரு குடையின்கீழ் இணைக்கையில், அரச பரம்பரையாய் ஆளவேண்டுமென்ற சிம்மாசனக் கனவுலகில் மிதந்த ராஜபக்‌ஷ கம்பனியினர் இன்று தமக்குள் அதிகார, பதவிப் போட்டிகளால் முட்டி மோதிக் கொண்டுள்ளனர். நொடிக்குநொடி அரசியல் அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கையில் ராஜபக்‌ஷ குடும்பம் இலங்கை அரசியலில் இருந்து துடைத்தெறியப்படவேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாய் இருக்கின்றனர்.

2009 ன் இதேபோன்றதொரு காலப்பகுதியில்தான் இதே பூமிப்பந்தின் இந்துசமுத்திரத்தின் முத்தின் வடகோடியில் நாகரிக மானுட உலகம் வெட்கித்தலைகுனியும்படியாக பல ஆயிரம் உயிர்கள் பலிகொள்ளப்பட்டன. உலக போரியல் விதமுறைகள் மீறப்பட்டு ஒரு பூர்வீக இனத்தின் மீது இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒரு இனம் வரலாற்று வடுக்களை தன்னுள்ளே பதிவு செய்கையில் ஏனைய இரு இனங்கள் பாற்சோறு புசித்தகதை வேதனையைத் தந்தது.

ஆனாலும், இன்றைய சூழ்நிலையில் நாட்டின் வடக்கு, கிழக்கில் இன்றைய போராட்டித்திற்கு ஆதரவுக்கரம் நீட்ட தமிழர்கள் பின்னிற்கவில்லை. தனி ஒரு இனமாக தாம் கொத்துக் கொத்தாக பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டபோதும் தென்னிலங்கையில் இருந்து எந்தவொரு ஆதரவுக் கரமும் நீட்டப்படாதபோதும் தமிழர்கள் ஏனைய சமூகத்தாருடன் ஒன்றுபட்டு வாழவே விரும்புகின்றனர் என்பதற்கு சான்றாக அவர்கள் இன்று வழங்கிவரும் ஆதரவொன்றே போதுமானதாகும்.

உண்மையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் இன்று நாடு அனுபவிக்கும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அனுபவித்தவர்கள். அத்தோடு இன்று அதிகளவிலான வடக்கு கிழக்கில் வாழும் குடும்பங்களின் உறுப்பினர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடுகளிலும் வாழ்வதனால் இன்றைய பொருளாதார நெருக்கடியும் விலையேற்றங்களும் நாட்டின் ஏனைய பாகங்களை போல் வடக்கு கிழக்கை பாதித்ததாக கூறுவதற்கில்லை. பொருட்களுக்கு தட்டுப்பாடு என்கின்ற பிரச்சினையே அன்றி அவர்களுடைய பொருளாதாரம் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இருப்பினும் தமிழர் தரப்பு பாராளுமன்றத்திலும் சரி பல்கலைக் கழகத்திலும் சரி அரசுக்கு எதிரான எதிர்ப்பை பெரும்பான்மை சிங்கள மக்களுடன் இணைந்து வலுப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தபோராட்டம் பெற்றோலுக்கும், காஸூக்கும் மாரடித்ததாக முற்பெறுமோ என்கிற எண்ணம் தமிழர்களின் ஆழ்மனதில் உள்ளது. விலைவாசியுடன் பொருளாத பிரச்சினைகளும் சீரடைந்தால் காலிமுகத்திடல் காலியானவுடன் சிறுபான்மை சமூகத்திற்கெதிரான அடக்குமுறைகள் தொடர்கையில் எதிர்காலத்தில் இந்த அரசுக்கெதிரான போராட்டக்காரர்களின் சிறுபான்மை மக்கள் தொடர்பான நிலைப்பாடு எவ்வாறு விட்டுக்கொடுப்போடு இருக்கப்போகிறது என்பதுதான் இவர்களது போராட்டம் நாட்டின் நலனுக்கான, மக்கள் நலனுக்கான போராட்டமா என்பதை உறுதிப்படுத்தும்.

ஏனெனில், காலமுகத்திடலில் அனைத்து சமூகமும் இணைத்ந்து ஒன்றுபட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கையில் கல்முனையில் ஒரே மொழிபேசும் இரு சமூகங்களிடையே கடந்தவாரம் இடம்பெற்ற சம்பவமொன்று நெருடலைத் தருகின்றது.

அண்மையில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சீ. அன்சார் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக,ஆணையாளர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தரான என்.சிவலிங்கம் நியமனம் செய்யப்பட்டார். அவர் கடமையை பொறுப்பேற்க மாநகர சபைக்கு வந்தபோது அவருக்கு மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் இனால் தடையேற்படுத்தப்பட்டிருந்தது. அதிலும், குறிப்பாக தமிழர் ஒருவர் கல்முனையில் ஆணையாளராக செயற்பட முடியாது என தனது முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்களிடம் தெரிவித்தாகவும் அறியமுடிகின்றது.

ஆணையாளர் பதவி என்பது ஒரு அரச பதவியே அன்றி அரசியல் பதவி அல்ல. அவ்வாறு இருக்கையில், குறிப்பிட்ட அரச பதவிகள் இனரீதியான நியமனங்களாக இருக்கவேண்டுமென ரக்கீப் போன்ற அரசியல்வாதிகள் ஊக்குவிப்பதானது எவ்வாறு சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வியை தோற்று விக்கின்றது. ஊழல் தொடர்பில் ஒரு உத்தியோகத்தர் இடைநிறுத்தப்படுவது அல்லது இடமாற்றப்படுவது தொடர்பில் ஏற்படும் வெற்றிடங்களுக்காக இன்னுமொரு உத்தியோகத்தர் நியமிக்கப்படுவதென்பது அரச துறையில் சாதாரண விடயமாகும். அதை தடுத்து நிறுத்துவதற்கு எவருக்கும் எந்த முகாந்திரமும் இருக்கமுடியாது.

இருப்பினும் கல்முனையை பொறுத்தவரை தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரங்களில் முஸ்லிம்கள் மட்டுமே இருக்கவேண்டுமென குறுகிய அரசியல் இலாபம் தேடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் எண்ணம் கொண்டுள்ளனர். இன ஐக்கியம், இனங்களுக்கிடையே விட்டுக்கொடுப்பு என அடிக்கடி தமிழ் – முஸ்லிம் உறவை பற்றி பேசும் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கல்முனை மாநகர சபையின் மேயர் ஒருவர், தமிழ் அதிகாரி ஒருவருக்கு எதிராக நடந்துகொண்ட இந்த அநாகரிக செயலை முறைகேடானது என எந்த முஸ்லிம் தரப்புக்களும் தெரிவிக்கவில்லை. கண்டும் காணாத போக்கில் உள்ள இந்த அமைப்புகளும் தனி நபர்களும் தமிழர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும்போது மட்டும் இன உறவுகள் பற்றி வியாக்கியானம் செய்ய முற்படுவதேன்?

இதேவேளை, த.தே.கூ மாநகர சபை உறுப்பினர் ராஜன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி மாநகர சபை உறுப்பினர் செல்வா தவிர எந்த தமிழ் உறுப்பினர்களும் தமிழ் அதிகாரி ஒருவர் இங்கு நியமிக்கப்படக்கூடாது என்ற முதல்வரின் செயற்பாட்டை கண்டுகொள்ளவில்லை. தேவைக்கேற்ப தங்களது அரசியல் நாடகங்களை அரங்கேற்றும் கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி மேயருக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் பகிரங்கமாகவும் திரைமறைவிலும் பல ஒத்தாசைகளை வழங்கிவருகின்ற நிலையில் முதல்வர் றக்கீப் இன் இச்செயற்பாடு த.தே.கூட்டமைப்புக்கு இன்னும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அத்தோடு கல்முனையில் தமிழர்கள் மீது முஸ்லிம் அரசியல் வாதிகளின் காழ்ப்புணர்ச்சி தெட்டத்தெளிவாக புலப்படுகையில் சில த.தே.கூ வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்காக மும்மொழிகளிலும் முளக்கமிடுகையில் தன் இனம்மீது முஸ்லிம் அரசியல் வாதிகளால் கட்டவிழ்த்துவிடப்படும் எல்லை மீறிய செயற்பாடுகளை கண்டிக்காமல் இருப்தேன்? இவற்றை பாராளுமன்றில் சுட்டிக்காட்ட தலைப்படாததேன்?

அரசியலமைப்பின் 20 ம் திருத்தத்தை ஆதரித்த அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள பிரதேசம் கல்முனை. முஸ்லிம் காங்கிரஸ் சில உறுப்பினர்கள் உட்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ம் திருத்தத்தை ஆதரித்தது மட்டுமன்றி மக்கள் வேண்டாமென்கின்ற தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுள்ள நிலையில் இவை ஒன்றுக்குமே ஒவ்வாத நிலைகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் முஸ்லிம் காங்கிரசுடன் ஒட்டி உறவாடும் மர்மம்தான் என்ன?

இவ்வாறானா பல்வேறுபட்ட கேள்விகளுக்கு நடுவே, “பிட்டும் தேங்காய் பூவும் போல” என உவமையிட்டு கூறப்படும் ஒரே மொழிபேசும் தமிழ் – முஸ்லிம் உறவுக்கு நடுவே முஸ்லிம்கள் தமிழர்களை அரசியல் அதிகாரங்களையும், அரச அதிகாரங்களையும் பயன்படுத்தி அடக்கி ஒடுக்க முனைகையில் காலிமுகத்திடலிலும் பெரும்பான்மையினருடன் சேர்ந்து போராடிய பின் தமிழர்களுக்கு பருப்புக்கும் பாணுக்குமான போராட்டமாகிவிடக்கூடாது என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

-/அரவி வேதநாயகம்