அட்டப்பளத்தில் இந்துமயானம் ஆக்கிரமிப்பு: மக்கள் கொதித்தெழுந்து ஆரப்பாட்டம்!
மயானப் பூமியை அபகரிக்க பேராசிரியர் முயற்சியாம்!

இன முரண்பாடில்லாதவகையில் தீர்த்து வைக்கப்படும் என்கிறார் பொலிஸ் அதிகாரி அசார்

(காரைதீவு  நிருபர் சகா)
 

அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர்ப்பிரதேசத்துக்குட்பட்ட அட்டப்பளம் இந்துமயானத்தை ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மக்கள் கிளர்ந்தெழுத்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

இச்சம்பவம் நேற்று (27) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.

அருகிலுள்ள காணிச்சொந்தக்காரரான தென்கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் (முஸ்லிம்) இந்தக்காணியை இன்றுஅளக்கமுற்பட்டபோது பிரச்சினை வெடித்தது.

ஏற்கனவே சில மாங்களுக்கு முன்பு இதேபோன்று அங்கு இதே பேராசிரியர் தனது காணியினை அளந்தபோது அட்டப்பளம் தமிழ்மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த இந்து மயானத்தையும் சேர்த்து அளக்கமுற்பட்டார்.

அப்போதும் இதே மாதிரியான பதட்டநிலை உருவானது. அப்போது இந்துமயானத்திற்கென 2ஏக்கர் காணி பூர்வீகமாக உள்ளதென பலராலும் கூறப்பட்டதனால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரச்சினை தணிந்தது.

இந்த விடயம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால் நேற்று (27) மீண்டும் அதே பேராசிரியர் மீண்டும் கிராமசேவையாளரோடு வந்து தனதுகாணியோடு மயானக்காணியையும் அளக்கமுற்பட்டபோது பிரச்சினை வெடித்தது. செய்தியறிந்து அட்டப்பளம் மக்கள் கொதித்தெழுந்து ஒன்றுகூடி போராட்டம் நடாத்தினர்.

நிந்தவூர்ப்பிரதேச செயலக அதிகாரிகள் சம்மாந்துறை பொலிசார் என பலதரப்பட்டவர்களும் அங்கு வந்துசேர்ந்தனர்.

நீதிமன்ற கட்டளையில்லாமல் மீண்டும் இந்தக்காணியை அளக்கமுற்பட்டதுதான் பிரச்சினை எனத் தெரியவருகிறது.

சம்மாந்துறைப்பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இப்னுஅசார் களத்திற்கு விரைந்து அசாதாரணசூழலைக்கட்டுப்பாட்டிற்கு கொணர்ந்தார்.

சம்மாந்துறைப்பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இப்னுஅசார் களத்தில்நின்று கருத்துத்தெரிவிக்கையில்:

இந்த பதட்டநிலைமையை அறிந்ததும் இங்கு வந்துசேர்ந்தேன். தனிநபர் பிரச்சினை இனப்பிரச்சினையாக மாறக்கூடிய துர்ப்பாக்கியநிலை நிலவியது.

எனவே விரைந்து செயற்பட்டு முதலில் பதட்டத்தை தணித்தேன். இருசாராரையும் அழைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

ஸ்தலத்திற்கு விரைந்த த.தே.கூட்டமைப்ப்pன் காரைதீவுப்பிரதேசபைக்குத் தெரிவான  சமுகசேவையாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மக்களோடு நின்று போராடினார்.

களத்தில் நின்று கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்  கூறுகையில்: 

இது எமது தமிழ்மக்களின் மயானப்பூமி. பாரம்பரியமாக இங்குதான் பாட்டன்பாட்டி காலத்திலிருந்து பிரேதத்தை புதைத்து வந்தார்கள். அதனைக்கூட அளந்து அபகரிக்க ஒரு முஸ்லிம் அதுவும் ஒரு பேராசிரியர் ஒருவர் தலைப்பட்டுள்ளமை கேவலமானது.

இது எமது மண்.செத்தாலும் இங்கேயே சாவோம். இந்த விடயத்தில் அரசஅதிகாரிகள் ஒருதலைப்பட்டசமாக நடந்துகொள்வது போன்று தெரிகிறது. ஆனால் இதனை நாம் சும்மா விடப்போவதில்லை. நீதிமன்றம் வரை கொண்டு செல்லவும் தயங்கமாட்டோம். என்றார்.

 அட்டப்பளம் ஆலயத்தலைவர் எஸ்.கோபால் கூறுகையில்:

எனக்கு வயது 48. நானறிந்த காலம்முதல் அதற்கும் முன்பும் இந்த மயானத்தில்தான் அட்டப்பளத்தில் இறக்கும் மக்களது சடலத்தை புதைத்துவருகின்றோம்.

உண்மை இப்படியிருக்க அருகிலுள்ள காணிஉரிமையாளர் வந்து எமது மயானத்தையும் சேர்த்து அளந்து அபகரிக்கமுற்படுவது எந்த வகையில் நியாயம்? பேராசிரியர் என்கிறார். இதுதானா அவர் படித்தது? என்ன நடந்தாலும் நாம் விடமாட்டோம். பொலிஸ் பொறுப்பதிகாரி அசார் நல்லதீர்வைத்தருவாரென்று நினைக்கின்றேன். என்றார்.

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் இஸதீன்லத்தீப்பிடம் கேட்டபோது :

இதுவிடயம் தொடர்பில் எமக்கு முன்னர் முறைப்பாடு கிடைத்தது.

நிந்தவூர்பிரதேசசெயலகத்திடம் இது தொடர்பான அறிக்கையை நாம் கேட்டிருந்தபோதும் இன்னும் அது வந்து சேரவில்லை இருப்பினும் நாம் இன்று அங்கு சென்று நிலவரத்தை ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுவோம் என்றார்.

இதேவேளை  கிராமசேவையாளர் உதவிபிரதேசசெயலாளர் ஆகியோர்  தமக்கு அரசகாரியம்செய்ய மறுத்த மக்களை எதிர்த்து பிரதேசசெயலகம் முன்றலில் மற்றுமொரு போராட்டம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது

By admin