இந்தியா (பஞ்சாப்) :  கதறக் கதற குழந்தையை அடித்த பணிப்பெண்! காமிரா காட்டிக் கொடுத்தது!

தன்னுடைய ஒன்றரை வயதுப் பெண் குழந்தை அடிக்கடி கீழே விழுந்து காயத்தை ஏற்படுத்திக் கொள்வதாக வீட்டு பணிபெண் கூறும் காரணங்கள் குறித்து குழந்தையின் தந்தைக்கு சந்தேகம் வந்ததை  அடுத்து, யாருக்கும் தெரியாமல் ஒரு காமிராவை வீட்டினுள் மறைத்து வைத்தார். பின்னர் அந்தக் காமிராவில் பதிவான சம்பவங்களை அவர் காண நேர்ந்த போது அதிர்ந்து போனார்.

அந்தக் குழந்தைத் தொடர்ந்து பணிபெண்ணிடம் பிரம்பினால் கண்மூடித்தனமாக அடிக்கப்பட்ட சம்பவம் அதில் பதிவாகி இருந்தது.

பிரம்பினால் கால்களிலும் கைகளிலும் அந்தக் குழந்தை கதறக் கதற அடிக்கப்பட்டாள். பல சந்தர்ப்பங்களில் அந்தக் குழந்தையின் சட்டை கலரைப் பிடித்துப் படுக்கை மீது தூக்கித் தூக்கி வீசப்படும் சம்பவங்கள் நடந்தன.

அடிக்கப்படும் போதெல்லாம் வலி தாங்க முடியாமல் குழந்தை கதறி அழுது மூச்சுத் திணறிக் கிடப்பதை அதில் காண முடிந்தது. பல நாள்கள் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பது அந்த ஒரு நாள் காமிரா பதிவில் அம்பலத்திற்கு வந்தது.

இந்தக் காட்சிகளைக் கண்டு ஆவேசமடைந்த குழந்தையின் தந்தையான சுக்தேவ் சிங் எனபவர், அந்தக் காமிரா பதிவுடன் சென்று போலீசில் புகார் செய்தார். ஆதன் பின்னர் அந்தப் பணிபெண் போலீசரால் கைது செய்யப்பட்டாள்.