சீனா  : விமானத்தினுள் ‘போன் சார்ஜ்சர்’ வெடித்து தீப் பிடித்தது! பயணிகள் பீதி!……

சீனாவின் குவாங்ஷாவ் விமான நிலையத்தில்,  விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்து கொண்டிருந்த தருணத்தில், உடமைகள் வைக்கப்படும் பகுதியில் திடீரென தீப் பிடித்ததில் பயணிகள் பீதிக்கு உள்ளாயினர்.

சவுத்தர்ன் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த விமானத்தில், பயணிகளின் இருக்கைகளுக்கு மேலே பொருள்கள் வைக்கப்படும் அலமாரிப் பகுதிக்குள் இருந்து திடுதிப்பென வெடிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து புகையுடன் நெருப்புக் கிளம்பியதாக அந்த விமான நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்தது.

பயணி ஒருவரின் கைத்தொலைபேசி சார்ஜ்சர் , சூடேறி வெடித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது.  இந்த சார்ஜ்சரை வைத்திருந்த பயணியைப் போலீசார் உடனடியாக கைது செய்து மேற்கொண்டு விசாரிப்பதற்காக கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவம் எதேச்சையாக நடந்ததா? அல்லது சதிச் செயலா? என்பது குறித்து கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தீப் பிடிக்கத் தொடங்கியதும் அவசர அவசரமான பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு சாதனங்களைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது. சுமார் 3 மணி நேர தாமதத்திற்குப் பின்னர்  விமானம்  புறப்பட்டது.