எமது உறவுகளின் துயர் துடைக்க எமது தலைமை இன்னும் வைரமான மனப்பலம் பெறும்...

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம்)

-டினேஸ்-

மக்களின் துயர் தீர்க்கச் செயற்பட்ட இறை தூதர்களைக் கூட மக்கள் கல்லெறிந்து தூசித்ததை, துன்பப்படுத்தியதையே வரலாறு சொல்கின்றது. அந்த வரலாற்றுப் பக்கங்கள் தான் இங்கும் எழுதப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு நோக்கிய செயற்பாட்டை எவ்விதத்திலும் தடுக்க மாட்டாது. எமது உறவுகளின் துயர் துடைக்க எமது தலைமை இன்னும் வைரமான மனப்பலம் பெறும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு இறுதிக் கிரியை மேற்கொள்ளப்பட்டதாக வெளிவந்த செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா முற்சந்தியில், தபால் நிலையத்தின் அருகே சம்பந்தன், சுமந்திரனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இறுதிக் கிரியை செய்ததாகச் செய்தி வெளிவந்துள்ளது. இந்நிகழ்வு பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. பல மாதங்களுக்கு முன் சம்பந்தன் ஐயா அவர்களின் உருவப்படத்தை தெருவிலே இழுத்துச் சென்று தீயிட்டுக் கொழுத்திய நிகழ்வும் இதே வவுனியாவிலேதான் நடைபெற்றது. அதே ஆட்கள் தான் இதையும் செய்திருப்பார்கள் என்று ஊகிப்பதில் தவறில்லை. வேறு ஆட்கள் என்றாலும் மூலம் ஒன்றேதான்.

உறவுகளைத் தேடும் உறவுகளின், அவலத்தை, ஆற்றாமையை, விரக்தியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்படும் சம்பந்தன் ஐயா அவர்களும், சுமந்திரன் அவர்களும் இவ்வாறு அவமதிக்கப்படுவதுளூ அல்லது, கேள்விக்கு உட்படுத்தப்படுவது சனநாயகத்தையும், துயரத்தை வெளிப்படுத்துதலின் எல்லையையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன.

அண்மையில் உள்ளுர் அதிகார சபைத் தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் போராளிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியொன்றின் உறுப்பினர் ஒருவர் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டார். அதாவது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சம்பந்தன் ஐயாவிடமும், சுமந்திரன் அவர்களிடமும் தமது உறவுகளைக் கேட்கின்றார்கள், இவர்களிடமா ஒப்படைத்தார்கள் அல்லது, இவர்களா காணாமல் ஆக்கினார்கள் என்று. அதே போன்று சனநாயக நீரோட்டத்தில் கலந்துள்ள முன்னாள் போராளி இயக்கத்தின் தலைவர் ஒருவர், காணாமல் போனவர்கள் பற்றி சம்மந்தன் மற்றும் சுமந்திரனிடம் ஏன் கேட்கிறார்கள் எங்களிடம் கேட்டால் கூட அர்த்தம் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அத்தகைய உச்சத்துக்குச் செல்லவில்லை.

அரசியல் வெளிக்காட்டலுக்காக அல்லாமல் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலிலே முக்கியமானவற்றுள் ஒன்றாக அறுதியிட்டு அதற்கான அடைவை நோக்கி நிகழ்வு நிலை எனப்படும் யதார்த்த வழிமுறைகளுடாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மேற்குறித்த சம்பந்தன் ஐயாவும், சுமந்திரன் அவர்களும்.

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள் காரணமாகத்தான் காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு அதன் செயற்பாட்டுக்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களைத் தழுவிய செயற்பாடுகள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் கையாளப்பட்டுப் பதில் காணப்பட வேண்டும்.

இது தொடர்பில் உதவக் கூடிய சகலரும் குறித்த பணியகத்திற்கு தகவல் தரத் தயாராக இருக்க வேண்டும். இந்தப் பணியகம் கொழும்பில் மட்டுமல்லாது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தேவையெனில் வேறு இடங்களிலும் கிளைகளைக் கொண்டதாக அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திச் சொல்லியுள்ளது.

நிலைமைகள் இவ்வாறிருக்க வவுனியாவில் நிகழ்ந்துள்ள நிகழ்வானது காணாமல் ஆக்கப்பட்ட நம் உறவுகளின் உறவுகளை நோக்கி மற்றவர்களை எவ்வாறு பார்க்கச் செய்யும். அலசி ஆராய்ந்து தெளிவடைந்து தேற்றம் பெறாதவர்களுக்கு வேண்டுமென்றால் இது உவப்பாயிருக்கும். அல்லது, இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று அவர்களைச் சொல்ல வைக்கும்.

நடுநின்று பார்ப்போர், துயரிலே தோய்ந்துள்ள இவ் எதிர்ப்பாளர்கள் செய்வதைச் சரியென்றா சொல்லப் போகின்றார்கள்? நோயிற் துடிக்கின்றது பிள்ளை, குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டிருக்கின்றார்கள் பெற்றோர்கள், அவர்களோடு சேர்ந்து சிலர் இரக்கப்படுகின்றார்கள், வேறு சிலர் இரக்கப்படுவதாகப் பாசாங்கு செய்கின்றார்கள். ஆனால், இன்னும் இருவரோ, மூவரோ சிறந்த மருத்துவர்களைத் தேடி ஆர்வத்தோடும், அக்கறையோடும், சோகத்தோடும், துணிவோடும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தச் செயற்பாட்டாளர்களை ஏதோவொரு நோக்கம் கருதி சூழவுள்ளோர் தூற்றுவதைப் பொருட்படுத்தாமல் விடலாம். ஆனால் துடிக்கின்ற பிள்ளையின் பெற்றோருமா? அந்தத் தூற்றுதலைச் செய்ய வேண்டும். அதுவும் எல்லை கடந்து, இவ்வாறு எதைச் செய்தாலும் அது அந்தச் சோகத்துக்குள் மறைக்கப்பட்டு விடுமா?

மக்களின் துயர் தீர்க்கச் செயற்பட்ட இறை தூதர்களைக் கூட மக்கள் கல்லெறிந்து தூசித்ததை, துன்பப்படுத்தியதை வரலாறு சொல்கின்றது. அந்த வரலாற்றுப் பக்கங்கள் தான் இங்கும் எழுதப்படுகின்றன. மற வழியிலே தாக்குவதுதான் வீரம். அற வழியிலே தாங்குவதுதான் வீரம். இத்தகைய செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு நோக்கிய செயற்பாட்டை எவ்விதத்திலும் தடுக்க மாட்டாது. எங்கள் தலைமை தன் கடமையின் கனதியை அறிந்து, மிகத் துல்லியமாக உணர்ந்து செயற்பட்டு வருகின்றது.

போர்க்குற்றம், பொறுப்புக் றல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், நல்லிணக்கச் செயற்பாடுகள், அரசியற் தீர்வு என்பன நாட்டைப் பொறுத்தவரையிலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் முக்கியமானவை. இவை தொடர்பில் அசைந்து கொடுக்காததாய் இருந்தது, மஹிந்த அரசு. சர்வதேசத்தின் துணையுடன் மஹிந்த அரசு அசைவிக்கப்பட்டது. பின்னர் வந்த மைத்திரி அரசு இசைவிக்கப்பட்டது. இச் செயற்பாடுகளில் அதி முக்கிய பங்கைக் கூட்டமைப்பே வகித்தது.

இவ்விடயங்களின் அடைவு தொடர்பில் முன்னின்று செயற்படும் இலங்கை அரசு தனது அரசியலுக்கான மூலதனத்தை முற்றாகவே இழந்துவிடும் என்பது இந்நாட்டு அரசியல் நடைமுறை. எனவே, சர்வதேச மட்டத்திலே நம் நாடு நின்று பிடிக்க வேண்டும். அதற்காக நாம் இதையெல்லாம் செய்துதான் ஆக வேண்டும் எனப் பெருந்தேசிய மக்களை உணரச் செய்விக்க வேண்டும். இதன்வழி மேற்குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இது இன்றைய அரசின் கடமை.

எனவே, ஒவ்வொரு விடயத்திலும் உள்ள இயல்புத் தன்மையையும், இயற்கை நடைமுறையையும் சம்மந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் உணர்ந்து கொள்ளவும், ஒத்துக் கொள்ளவும், அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இவ்விடயத்தில் ஒத்துழைக்கவும் வேண்டும். தமது அனுபவங்களை, அறிதலை, உத்திகளை முன்னின்று உழைப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். விடைகாணும் விடயங்களை ஒட்டுமொத்தமாக சம்பந்தன் ஐயாவினதும், சுமந்திரன் அவர்களினதும் தலையில் மட்டும் கட்டிவிட முடியாது.

வலிக்கிறது என்பதால் உரக்கக் கத்துவதில் நியாயம் இருக்கின்றது. ஆனால், வலி தீர்க்க உழைப்பவர்கள் மீது கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு வானமா எல்லை? அன்பார்ந்த உறவுகளே நீங்கள் அம்பாகச் செயற்படுகின்றீர்கள் என்பதை நாம் அறிவோம். எய்தவர்களே, நம் உறவுகளைக் கொண்டு எதை எதையோவெல்லாம் செய்ய வைக்கின்றீர்கள். இதனைப் பார்த்து மூன்றாம் தரப்பினர் என்ன அபிப்பிராயப் படுவார்களோ நாம் அறியோம்.

ஆனால், ஒன்று இறுதிக் கிரியையின் பின்பும் மனிதர்கள் வாழ்வார்கள் என்றால் அவர்கள் மறுபிறப்பு எடுத்துள்ளார்கள் என்று தான் அர்த்தம். அதுதான் உண்மை, எங்கள் தலைமையும், அவர் வழி செல்லும் இளவலும் தளராது பணியாற்ற, எமது உறவுகளின் துயர் துடைக்க இன்னும் வைரமான மனப்பலம் பெறுவார்கள். உங்கள் துயர் துடைப்பார்கள். யாரொடும் நோகோம்… யார்க்கெடுத் துரைப்போம் என்று தெரிவித்தார்.

By admin