உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஸ்ய படைகளுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளை உறுதியுடன் முன்னெடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளார்.உக்ரைனிய மக்களிடம் தனது இரவு உரையின் போது பேசிய ஸெலென்ஸ்கி, அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண புலனாய்வாளர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து ரஸ்ய இராணுவத்தையும் விரைவில் அடையாளம் காண ஏற்கனவே முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.விசாரணைகளின் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவருடன் விவாதிக்கவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தனது துருப்புக்கள் செய்த போர்க்குற்றச் சான்றுகளை மறைக்க ரஸ்யா முயற்சிப்பதாக வோலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.செவ்வாயன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள ஸெலென்ஸ்கி, உக்ரேனிய குடிமக்கள் அவரது படைகளால் கொல்லப்பட்டதாக வந்த செய்திகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் விளாடிமிர் புடினின் ஆட்சி “பிரசார” நடவடிக்கையை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மரியுபோலில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதில் தங்கள் குற்றத்தை மறைக்க அவர்கள் ஏற்கனவே ஒரு பொய்யான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர் என்றும் ஸெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.