உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் அவரது சொந்த படையினரால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.37வது மோட்டார் ரைபிள் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய கர்னல் மெட்வெசெக், வேண்டுமென்றே தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. “அவர் வேண்டுமென்றே சொந்த துருப்புக்களால் கொல்லப்பட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்” என மேற்கத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உக்ரைன் மீது படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட ஏழாவது ரஷ்ய ஜெனரலாக 49 வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்திற்கு கட்டளையிடும் ஒரு லெப்டினன்ட் ஜெனரலும் சண்டையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, உக்ரைன் மீதான தனது இராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனை “விடுதலை” செய்வதே போரின் முக்கிய இலக்காக அடையாளம் கண்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.உக்ரைன் உடனான போரில் 1,351 படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,825 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் அல்லது அமெரிக்காவால் குறிப்பிடப்பட்ட ரஷ்ய உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதும் குறிப்பிடக்ககூடியது.

உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்ய படையினரின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16,100க்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.