மகளிர் டென்னிஸ் விளையாட்டில் உலக தர வரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லிக் பார்டி 25 வயதில் ஓய்வை அறிவித்து ஒட்டுமொத்த டென்னிஸ் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கண்ணீர் மல்க ஓய்வு: தனது ஓய்வு குறித்து ஆஷ்லிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க ஒரு வீடியோ மூலம் அறிவித்துள்ளார். அவருடன் அவரது நண்பரும் டபுள்ஸ் பார்ட்னரானவருமான கேஸி டெல்லாகுவா இருந்தார். அந்த வீடியோவில் ஆஷ்லிக் பேசுகையில், “இன்று என் வாழ்வில் கடினமான, உணர்வுப்பூர்வமான நாள். நான் எனது ஓய்வை அறிவிக்கிறேன். அதற்காக என் தோழியை துணைக்கு அழைத்துள்ளேன்.

உண்மையில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஓய்வை அறிவிக்க தயாராக இருக்கிறேன். டென்னில் எனக்காக என்னவெல்லாம் கொடுத்ததோ அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது கனவுகளை நிறைவேற்றிய டென்னிஸ், அதையும் தாண்டி நிறைய செய்துள்ளது. ஆனாலும், நான் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் எனக் கருதுகிறேன். எனது ரேக்கட்டை வைத்துவிட்டு மற்ற கனவுகளை துரத்த ஆயத்தமாகிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.