சுவாமி விபுலானந்தரின் கனவு நனவாகி வருகின்றது!
90வது வருட கால்கோள்விழாவில் இ.கி.மி.சுவாமி பிரபுபிரேமானந்தாஜீ.
-காரைதீவு நிருபர் சகா-

 இ.கி.மிசன் துறவி சுவாமி விபுலானந்த அடிகளார் அன்று கண்ட கனவு இன்று நனவாகிவருகிறது.அவர் ஆரம்பித்த இப்பாடசாலை இன்று 90வருடத்தை கண்டுள்ளது. இக்கல்விக்கூடம் மேலும் வளர குருதேவரை பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு இராமகிருஸ்ணமிசனின் மட்டக்களப்பு மாநிலத்தலைவர் ஸ்ரீமத். சுவாமி பிரபுபிரேமானந்தா ஜீ காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையின் 90வது வருட கால்கோள்தினவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வு (23) வெள்ளிக்கிழமை காலை பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தலைவர் டாக்டர்.ஜீவா சிவசுப்பிரமணியம் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலையில் புதிதாக அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட பழைய மாணவர்சங்கம் இக்கால்கோள் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

முன்னதாக பாடசாலையின் மத்தியிலுள்ள அன்னை சாரதா ஆலயத்தி;ல் விசேடபூஜைவழிபாடு இடம்பெற்றது.

கௌரவஅதிதியாக இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் பா.அ.சங்கசெயலாளர் எல்.எ.ரமேஸ்குமார் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

பின்னர் அங்கு அதிபர் எஸ்.மணிமாறன் வரவேற்புரை நிகழ்த்த டாக்டர் ஜீவா தலைமையுரை நிகழ்த்தினார். தொடர்ந்து 90வது வருட கால்கோள்விழாவையொட்டி ரீசேர்ட் வெளியிட்டுவைக்கப்பட்டது.

90வது வருட கால்கோள்விழாவையொட்டி பாடசாலை முன்றலில் நினைவுப்பெயர்ப்பலகையொன்று சுவாமியால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

அங்கு சுவாமி பிரபுபிரேமானந்தாஜி மேலும் உரையாற்றுகையில்:

இற்றைக்கு 90வருடங்களுக்கு முன்னதாக அதாவது 1928ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் எந்த நோக்கத்தோடு எண்ணத்தோடு ஆரம்பித்தாரோ அதே நோக்கில் இப்பாடசாலை பயணித்துக்கொண்டிருக்கிறது.இது எமக்கு மகிழ்சியைத்தருகிறது.

மேலும் 10வருடங்களில் இப்பாடசாலை நூற்றாண்டுவிழாவைக்காணஉள்ளது.

இ.கி.மிசனின் சிந்தனைகளை அடியொற்றிய காரைதீவு மண்ணில் அவதரித்த சுவாமி விபுலாநந்த அடிகளார் அனைவரும் நல்லாயிருக்கவேண்டுமென கனவுகண்டவர். அதற்காக உழைத்தவர் சேவை செய்தவர்.

ஒரு நாடு சிறப்பாக இருக்கவேண்டுமாயின் அங்குள்ள குடிமக்கள் நல்லாயிருக்கவேண்டும். அதற்கு அந்த சமுகம் சமுதாயம் நல்லாயிருக்கவேண்டும். அதனாலேதான் சுவாமி விபுலானந்தர் அனைவரும் நல்லாயிருக்கவேண்டும் என ஆசைப்பட்டார்.கனவுகண்டார்.

அவர் கண்டகனவு நனவாகிவருகிறது. அவர் இன்று அங்கிருந்து மகிழ்ச்சியடைவார். திருப்திகொள்வார்.ஆத்மா சாந்தியடையும்.

பழையமாணவர்சங்கச்செயலாளர் திருமதி பகீரதி மோகனராசு நன்றியுரைநிகழ்த்தினார்.

By admin